விளையாட்டு

ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது: மே 3-ம் தேதி பிரேசில் நாட்டை சென்றடைகிறது

செய்திப்பிரிவு

ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிட மாக கருதப்படும் கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரத்தில் நேற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. 2600 ஆண்டுகள் பழமையான அப் பல்லோ கடவுளின் ஆலயத்தில் நடிகர், நடிகைகள் பழங்கால கிரேக் கர்களைப் போல உடையணிந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

சூரிய ஒளியை குவி லென்ஸ் கண்ணாடியில் குவித்து அதில் எழுந்த ஜுவாலை மூலம் தீபம் ஏற்றப்பட்டது. கிரேக்க நடிகை கேத்ரினா, பூசாரி வேடமணிந்த நிலையில் தீபத்தை ஏற்றினார். இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை உணர்த்தும் விதமாக ஒலிம்பியாவில் இந்த ஜோதி ஏற்றப்பட்டுள்ளது.

தீபம் ஏற்றப்பட்டதும் ஆலிவ் இலையுடன் பாடல்கள் பாடியபடி நடந்து வந்து கிரீஸ் ஜிம்னாஸ்டிக் வீரர் எலப்தேரியஸ் பெட்ரோனியஸிடம் தீபத்தை வழங்கினார். ஒலிம்பிக் தீபத்தை பெற்ற அவர் தீப தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த தீபம் 329 நகரகங்கள் வழியாக பயணம் செய்து மே 3-ம் தேதி பிரேசில் நாட்டை சென்றடையும்.

அதன் பின்னர் பிரேசில் முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றுக்கு, ஒலிம்பிக் தீபத்தை 12,000 விளையாட்டு வீரர்கள் எடுத்துச் செல்கின்றனர். முடிவாக ரியோ டி ஜெனிரோவில் உள்ள போட்டி நடைபெறும் மாராக்காணா மைதானத்தில் இந்த தீபம் சேர்க்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாஹ், பிரேசில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் கார்லோஸ் நுஸ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரியோ டி ஜெனிரோ நகரில் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் கார்லோஸ் நுஸ்மான் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, “ரியோ ஒலிம்பிக் வரலாறு படைக்கும். பிரேசில் நாட்டை சூழ்ந்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை ஒலிம்பிக் போட்டியானது அகற்றி அனைத்தையும் ஒன்றிணைக்கும். ஒலிம்பிக் தீபமானது அன்பான பிரேசிலை ஒன்றிணைக்கும் தகவலை சுமந்து வரும்” என்றார்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பதவி நீக் கத்தை எதிர்கொண்டுள்ள பிரேசில் பெண் அதிபர் தில்மா ரோஷெவ், ஒலிம்பிக் தீபம் ஏற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா அகதி

ஒலிம்பிக்கில் முதன் முறை யாக அகதிகள் தீபத்தை ஏந்தி செல்ல உள்ளனர். ஏதேன்ஸ் நகரை தீப ஓட்டம் வரும் 26-ம் தேதி கடக்கும் போது எலோனஸ் அகதிகள் முகாமில் வசிக்கும் சிரியாவை சேர்ந்த ஒருவர் தீபத்தை கையில் ஏந்துகிறார். அவர் சிரியா உள்நாட்டு போரில் ஒரு காலை இழந்தவர் ஆவார். அவருடையை பெயர் முறைப்படி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT