ராஜ்கோட்டில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு கேப்டன் விராட் கோலி தனது முதல் டி20 சதத்தை எடுக்க அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த பெங்களூரு கேப்டன் கோலி அரைசதத்தை 40 பந்துகளில் எடுக்க அதன் பிறகு 23 பந்துகளில் சதத்தை எட்டி 63 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
அவருடன் 121 ரன்கள் 3-வது விக்கெட் கூட்டணி அமைத்த கே.எல்.ராகுல் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். விராட் கோலி 50 ரன்களையே ஓடாமல் எடுத்துள்ளார், மீதி 50 ரன்களை ஓடியே அவர் எடுத்துள்ளார் என்பது சமீபத்தில் அவர் வளர்த்துக் கொண்ட ஓட்டத்திறமையின் வெளிப்பாடு, ஆனால் எப்போதும் விரைவில் ஒன்று அல்லது இரண்டு, அல்லது மூன்று ரன்களை ஓடி எடுப்பதில் கவனம் செலுத்தும் வீரர்கள் பவுண்டரி விளாச வேண்டிய பந்துகளை கவனிக்கத் தவறி அதிலும் 2 ரன்கள் எடுப்பர், தோனியின் பேட்டிங் காலியானது இப்படித்தான்.
அந்த வகையில் தொடக்கத்தில் களமிறங்கிய விராட் கோலி முதல் 10 ஓவர்களில் 30 பந்துகளைச் சந்தித்து 41 ரன்களையே எடுத்தார். பவர் பிளே முடிவில் 6 ஓவர்களில் 50/1 என்று இருந்த பெங்களூரு கோலி, டிவில்லியர்ஸ் இருந்தும் அடுத்த 4 ஓவர்களில் 26 ரன்களையே எடுத்து 10 ஓவர்களில் 76 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. கடைசி 10 ஓவர்களில் 104 ரன்கள் என்பது அபாரம்தான், ஆனால் இடைப்பட்ட ஓவர்களில் சிங்கிள்கள், இரண்டுகள் அதிகம் எடுக்கப்பட்டால் அது ஸ்கோர் 200 ரன்களுக்குச் செல்ல வேண்டியதை தற்போது தடுத்துள்ளதாகவே படுகிறது.
குஜராத் லயன்ஸ் அணியில் பிரெண்டன் மெக்கல்லம் இருக்கும் போது, அவர் என்னதான் 5 போட்டிகளுக்கு ஒருமுறைதான் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்றாலும், மற்றொரு அதிரடி வீரர் ஏரோன் பிஞ்ச் உள்ளார், டிவைன் ஸ்மித் உள்ளார் இவர்களுக்கு ஆட்டம் பிடித்தால் நிச்சயம் கோலியின் சதம் விரயமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் 2-வதாக பேட் செய்யும் அணிக்கு கடினமாக இருக்கும் என்று கோலி தனது இன்னிங்ஸ் முடிந்து கூறினார். இது எந்த அளவுக்கு செயலாகும் என்பது குஜராத் இன்னிங்ஸ் தொடங்கி சில ஓவர்கள் கழித்துதான் தெரியவரும்.
முன்னதாக பெங்களூரு அணி வாட்சன் (6), டிவில்லியர்ஸ் (20) ஆகியோரை முறையே குல்கர்னி மற்றும் தாம்பேயிடம் இழந்தது.