புதுடெல்லி: விராட் கோலி தனது ஈகோவை உதறிவிட்டு, இந்திய அணியின் அடுத்துவரும் இளம் வீரர் கேப்டன்ஷிக்கு கீழ் விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார்
இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக வலம் வந்த விராட் கோலி, தென் ஆப்பிரிக்கத் தொடருக்குப் பின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த கேப்டன் கோலி மட்டும்தான், ஐசிசி தரவரிசையில் இந்திய அணியை முதலிடத்துக்கு கொண்டு சென்றதும் கோலியின் தலைமைதான். விராட் கோலியின் கேப்டன் பதவி விலகல் குறித்து கபில் தேவ் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியது:
"விராட் கோலி கேப்டன்பதவியிலிருந்து விலகியதை வரவேற்கிறேன். கோலி கேப்டன் பதவியை ரசிக்கவில்லை. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய பணி கேப்டன் பதவி. டி20 கேப்டன் பதவியை கோலி துறந்ததில் இருந்தே கோலி கடினமான காலத்தைதான் கடந்து வந்தார், சமீபகாலமாக கோலி கடும் நெருக்கடிகளுடன்தான் இருந்தார். ஆதலால், சுதந்திரமாக, நெருக்கடியில்லாமல் விளையாடுவதற்காக கோலி கேப்டன் பதவியை கைவிட்டது ஒரு நல்ல வாய்ப்பு. அதை செய்துள்ளார்.
கோலி முதர்ச்சியான மனிதர். இந்த முக்கியமான முடிவை எடுக்கும் முன் கோலி பலமுறை சிந்தித்திருப்பார். அவர் கேப்டன்ஷி பதவியைக் கூட ரசிக்காமல் இருந்திருக்கலாம், அவரை ஆதரிக்க வேண்டும், அவருக்கு வாழ்த்துகள்.
கவாஸ்கர் என் கேப்டன்ஷியில் விளையாடியிருக்கிறார், நான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், முகமது அசாருதீன் தலைமையில் விளையாடிருக்கிறேன். எனக்கு எந்த ஈகோவும் இருந்தது இல்லை. கோலி தனது ஈகோவை கைவிட்டு, இளம் வீரர் ஒருவரின் கீழ் சுதந்திரமாக விளையாட வேண்டும். இது அவருக்கும் இந்திய அணிக்கும் உதவும், புதிய கேப்டனுக்கும், இளம் வீரர்களுக்கும் அவர் வழிகாட்டவும் முடியும். கோலியை பேட்ஸ்மேனாக இழக்க முடியாது" என்று கபில் தேவ் கூறியுள்ளார்.