இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் உள்ள நியூலேண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் கேப்டன் எல்கர் விக்கெட்டை பறிகொடுத்திருந்த தென்னாப்பிரிக்க அணிக்கும் இன்றும் ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அணியின் 8வது ஓவரை வீசிய பும்ரா மார்க்கரமை அவுட் ஆக்கினார். இதன்பின் நைட் வாட்ச்மேனாக வந்த கேசவ் மகராஜ்ஜை உமேஷ் யாதவ் வெளியேற்றினார்.
இதன்பின் வந்த ஒவ்வொரு வீரர்களும் கீகன் பீட்டர்சன் தவிர சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கீகன் பீட்டர்சன் மட்டும் நிலைத்து நின்று இந்திய பௌலிங்கின் தாக்கத்தை சமாளித்தார். அவர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.
இறுதியாக முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியை விட தென்னாபிரிக்க அணி 13 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்ச 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென்னாப்ரிக்க அணியும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. கடைசி போட்டியான இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணியும் விளையாடி வருகின்றன.