புதுடெல்லி: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க அகமதாபாத் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஐபிஎல் ஏலத்தையும் பெங்களூருவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் சற்று புதுவிதமானது. வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் புதிதாக இணைகின்றன. அகமதாபாத் மற்றும் லக்னோ நகரங்களை தலைமையாக வைத்து இரு அணிகள் வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் 19 உள்நாட்டு வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிதாக இடம்பெறும் இரு அணிகளும் 3 வீரர்களைத் தக்கவைக்கலாம்.
வீரர்கள் தக்கவைப்பு முடிந்தநிலையில், அடுத்ததாக மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள், வீரர்கள் மத்தியி்ல் ஏற்படுத்தியுள்ளது. எந்த அணிக்கு எந்தெந்த வீரர்கள் செல்வார்கள், அணியின் பலம், பலவீனம் குறித்து அறிய பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஆனால், ஐபிஎல் மெகா ஏலம் எங்கு நடக்கும் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை. கொல்கத்தா அல்லது சென்னையில் ஐபிஎல் மெகா ஏலம் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. அதன்பின் பெங்களூரு அல்லது கொச்சி நகரில் நடக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், பெங்களூருவில் நடக்க இருப்பதாக ஐபிஎல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதத்தின் 2-வது வாரத்தில் பெங்களூருவில் ஏலம் நடப்பதாகவும், 11 முதல் 13ம்தேதிக்குள் ஏலம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே புதிதாக உருவாகியுள்ள அகமதாபாத் அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நியமிக்கவும் பேசப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை முன்னிறுத்தி அணி நிர்வாகம் செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அகமதாபாத் அணி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “அகமதாபாத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” எனத் தெரிவித்தனர். இதில் புதிதாக வந்துள்ள அகமதாபாத், லக்னோ அணிகள் ஏலத்தில் பங்கேற்கும் முன் ரூ.33 கோடியில் வீரர்களைத் தக்கவைக்கலாம் என பிசிசிஐ தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வீரர்களைத் தக்கவைக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.