விளையாட்டு

ஐபிஎல் ஏமாற்றத்தை சரிக்கட்ட ஆகஸ்டில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20

செய்திப்பிரிவு

ஐபிஎல் ஏமாற்றத்தை ஈடுகட்ட தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டியை அறிமுகப் படுத்துகிறது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். இந்த தொடர் ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8 சீசன்களிலும் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றுக்கு சூதாட்ட விவகாரத்தால் இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு அணிகளுக்கு பதிலாக ரைசிங் புணே சூப்பர் ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகியவை களமிறங்கியுள்ளன. தோனி புணே அணிக்கும், ரெய்னா குஜராத் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு எந்தவொரு ஆட்டமும் ஒதுக்கப்படவில்லை.

இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிஎஸ்கே ரசிகர்களின் இக்குறையைப் போக்க தமிழ்நாடு அளவிலான டி 20 போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்று ஐபிஎல் பாணியில் இந்த தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. தமிழ்நாடு லீக் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள தமிழ்நாடு மற்றும் இதர மாநில வீரர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.

இந்த ஆண்டு சென்னையில் மட்டும் இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு திண்டுகல்லிலும் போட்டிகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. திண்டுகல்லில் கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் வீரர்களின் டி 20 திறமையை வெளிக்கொண்டுவரவும், மாவட்ட கிரிக்கெட் சங்கங்களின் கட்டமைப்பை வளர்க்கும் விதமாகவும், மைதானத்துக்கு புதிய ரசிகர்களை கொண்டுவரு வதும் தான் இந்த டி 20 தொடரின் முக்கிய குறிக்கோள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளிபரப்பு உரிமம், அணிகளின் உரிமை ஆகியவை தொடர்பாக இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT