விளையாட்டு

சர்வீஸ் செய்ய அதிக நேரம் எடுக்கிறார் நடால் மீது செக். குடியரசு வீரர் குற்றச்சாட்டு: விம்பிள்டனில் புதிய சர்ச்சை

செய்திப்பிரிவு

சர்வீஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் மீது செக். குடியரசு நாட்டைச் சேர்ந்த லூகாஸ் ரசூல் குற்றம்சாட்டியுள்ளார்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யின் 2-வது சுற்று ஆட்டத்தில் லூகாஸை நடால் தோற்கடித்தார்.

இதன் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய லூகாஸ், சர்வீஸ் செய்வதற்கு நடால் வேண்டுமென்றே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். முன்னணி வீரர்கள் இதுபோன்ற தவறை செய்யும்போது நடுவர்களும் அவர்களைக் கண்டு கொள்வது இல்லை. இது தவறான முன்னுதாரணம். அதே நேரத்தில் வளர்ந்து வரும் வீரர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சர்வீஸ் செய்கிறார்கள். முன்னணி வீரர்கள் என்பதால் விதிகளை மீற அனுமதிக்கலாமா? இதனை யாரும் கண்டுகொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

நடால் அதிக நேரம் எடுத்து சர்வீஸ் செய்ததுதான் அவரிடம் நான் தோல்வியடையக் காரணம் என்று கூறவில்லை. டென்னிஸ் விதிமுறைகள் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றுதான் இதனைக் கூறுகிறேன் என்றார்.

டென்னிஸ் விதிப்படி ஒரு வீரர் 25 விநாடிகளில் சர்வீஸ் செய்ய வேண்டும். அதிகபட்சமாக 30 விநாடிகள் வரை சர்வீஸ் செய்ய நேரம் அனுமதிக்கப்படும். இதற்கு மேல் நேரம் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்க முடியும்.

லூகாஸுக்கு பெடரர் ஆதரவு

லூகாஸ் ரசூலின் கருத்துக்கு முன்னணி வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “இது மிகவும் முக்கியமான விஷயம். டென்னிஸ் வீரர்களாகிய நாம் அனைவரும் விதிகளின்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் சர்வீஸ் செய்ய வேண்டும். எனெனில் அதிக நேரம் எடுத்துக் கொள்வது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT