2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 17 நாட்கள் நடைபெறும் இந்த ஒலிம்பிக் திருவிழா 21-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான கவுன்டவுன் ஒலிம்பிக் தீபம் ஏற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
ஒலிம்பிக் போட்டிகள் பிறந்த கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது சூரிய ஒளியை குவி லென்ஸில் குவித்து அதில் இருந்து உருவாகும் ஜூவாலை மூலம் ஏற்றப்படும். இதற்கான ஒத்திகை கடந்த இரு நாட்களாக நடத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை இன்று ஒலிம்பியாவில் வானிலை மாற்றம் இருந்தால் தீபம் ஏற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகளையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செய்துள்ளது.
நவீன ஒலிம்பிக் விளையாட்டு போட்டி 1928-ல் ஆம்ஸ்டர்டாமில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 1936-ல் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இருந்து தான் ஒலிம்பிக் தீப ஓட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜெர்மனியை ஆட்சி செய்த நாஜி படைகள் தான் இந்த ஒலிம்பிக் தீப ஓட்டத்தை நடத்தின. கடந்த 2008-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் ஒலிம்பிக் தீப ஓட்டம் நீண்ட தூரம் நடைபெற்றது. எவரெஸ்ட் சிகரம் வரை சென்ற ஒலிம்பிக் தீபத்தை 21,800 பேர் கைகளில் ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதும் தீபமானது 329 நகரங்கள் வழியாக பயணம் செய்து ஒலிம்பிக் திருவிழா நடைபெறும் பிரேசில் நாட்டை மே 3-ம் தேதி சென்றடைகிறது.
இதன் பின்னர் பிரேசிலியாவில் கொண்டாட்டங்கள் தொடங்கும். ஒலிம்பிக் தீபமானது பிரேசில் நாட்டின் 26 மாநில தலை நகரங்களிலும் பயணம் செய்கிறது. நாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் ஒலிம்பிக் தீபத்தை கண்டுகளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டுக்குள் நுழையும் தீபமானது அடர்ந்த காடுகள், வெற்று நிலம், நீர்சூழ்ந்த அருவிகள் வழியாகவும் பயணிக்கிறது. தீப ஓட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொருவரும் தீபத்தை 200 மீட்டர் வரை எடுத்து செல்வார்கள்.
இந்த முறை ஒலிம்பிக் தீபத்தை முதன்முறையாக கைகளில் ஏந்தி செல்லும் பெருமையை அகதிகள் பெறுகின்றனர். ஏதென்ஸ் அருகில் உள்ள இலினோஸ் முகாமை ஒலிம்பிக் தீபம் கடந்து செல்லும் போது அங்கு தங்கியிருக்கும் அகதிகள் தீப ஓட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ஆப்கானிஸ்தான், ஈரானைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் அகதிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் தீபமானது சிறப்பான வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 5 நிறங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நிறமும் பிரேசில் நாட்டின் இயற்கை வளத்தை குறிப்பதாக உள்ளது.
தீபத்தின் மேல் பகுதி தங்க நிறத்தில் காணப்படுகிறது. இது வானத்தையும், சூரியனையும் குறிக்கிறது. இரண்டாவதாக பச்சை நிறம். இது ரியோ நகரின் மலை வளத்தை குறிப்பதாக உள்ளது. மூன்றாவது நீல நிறம். இது கடல்வளத்தை குறிக்கிறது. அடுத்தது கருநீலம். இது மைதானத்தையும், ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டின் நிலத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்துபவர்கள் வெள்ளை நிற சட்டையும், மஞ்சள் நிற பேண்டுடன் அதில் ஏதாவது ஒரு இடத்தில் பச்சை நிறம் இடம் பெற்ற ஆடைகளையே அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் வெள்ளை நிறமானது அமைதி மற்றும் ஒற்றுமையையும், மஞ்சள் நிறம் ஒலிம்பிக் தீபத்தையும், பச்சை நிறம் பிரேசில் நாட்டின் கொடியையும் உணர்த்துவதாக உள்ளது.
ஒலிம்பிக் தீபத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக ஒரு பயணியின் வாழ்க்கை (The Life of a Traveler) அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தீப ஓட்டம் ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் நிறைவுபெறும். அன்றைய தினம் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மரக்கானா மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு உள்ள பெரிய கொப்பரையில் தீபம் ஏற்றப்படும்.
இதனை ஏற்றும் வீரர் யார் என்பது வழக்கமாக கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்படும். 1996-ல் அட்லான்டா ஒலிம்பிக்கில் முகமது அலி தீபம் ஏற்றினார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 7 இளம் தடகள வீரர்கள் தீபத்தை ஏற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.