சிட்னி டெஸ்ட்டில் இரு இன்னங்ஸிலும் சதம் அடித்த ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா | படம் உதவி: ட்விட்டர். 
விளையாட்டு

ஆஷஸ் 4-வது டெஸ்ட்; இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு: கவாஜா 2-வது சதம் அடித்து புதிய சாதனை

செய்திப்பிரிவு

சிட்னி: சிட்னியில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

நாளை ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்துள்ளது. கிராளி 22 ரன்களுடனும், ஹசீப் ஹமீது 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்து திணறியது. 5-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் ஜோடி இணைந்து அணியை மீட்டெடுத்தது. முதல் இன்னிங்ஸிலும் சதம் அடித்த உஸ்மான் கவாஜா, 2-வது இன்னிங்ஸிலும் சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்து 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஒரே டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 6-வது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கவாஜா பெற்றார். அதுமட்டுமல்லாமல் சிட்னி மைதானத்தில் நடந்த டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையையும் கவாஜா பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் கவாஜா 137 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்ஸில் 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பின் சர்வதேசப் போட்டிகளில் ஆடாமல் இருந்த கவாஜா, தனக்குக் கிடைத்த வாய்ப்பில் முத்திரை பதித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களும், இங்கிலாந்து அணி 294 ரன்களும் சேர்த்தன. 112 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் 4 விக்கெட்டுகளை மிக விரைவாக இழந்தது.

மார்கஸ் ஹாரிஸ் (27), வார்னர் (3), லாபுஷேன் (29), ஸ்மித் (23) ரன்களில் ஆட்டமிழந்தனர். 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு கவாஜா, கேமரூன் ஜோடி சேர்ந்து சரிவிலிருந்து அணியை மீட்டது.

இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு, 179 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அற்புதமான இன்னிங்ஸ் ஆடிய கவாஜா 86 பந்துகளில் அரை சதத்தையும், 130 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். டெஸ்ட் அரங்கில் கவாஜா அடிக்கும் 10-வது சதமாகும். கேமரூன் (74) ரன்களிலும் அலெக்ஸ் கரே ஆட்டமிழந்தவுடனும் 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக ஆஸ்திரேலிய அணி அறிவித்தது.

இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட்டுகளையும், மார்க் உட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 388 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. கிராளி 22 ரன்களுடனும், ஹசீப் ஹமீது 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை கடைசி நாள் மட்டுமே இருப்பதால், டிரா செய்ய இங்கிலாந்து அணி முயலுமா அல்லது வெற்றி பெற முயலுமா என்பது நாளை முதல் ஒரு மணி நேரத்தில் தெரிந்துவிடும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 358 ரன்கள் தேவை. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 4-வது இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு சேஸிங் செய்ததாக வரலாறு இல்லை. ஒருவேளை இங்கிலாந்து சேஸிங் செய்தால் வரலாறாகும். இல்லாவிட்டால் 4-0 என்று ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெறும்.

SCROLL FOR NEXT