மும்பை: வான்ஹடே மைதானத்தில் உள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ), பிசிசிஐ தலைமை அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் எம்சிஏ அலுவலகம் மூடப்பட்டது.
இரு அலுவலகங்களிலும் பணியாற்றிய 18 ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, 3 நாட்களுக்கு அலுவலகத்தை மூடி, கிருமிநாசினி தெளிப்புப் பணிகள் நடக்கின்றன.
இந்தியாவில் கரோனா 3-வது அலை தொடங்கியிருக்கிறது. கடந்த வாரம் வரை ஆயிரக்கணக்கில் மக்கள் தினசரி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றோடு சேர்ந்து ஒமைக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள மும்பை கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 15 பேருக்கும், பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 3 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, 3 நாட்களுக்கு எம்சிஏ அலுவலகத்தை மூடியுள்ளனர்.
எம்சிஏ செயலாளர் சஞ்சய் நாயக், உயர்மட்டக் குழு உறுப்பினர்களுக்குத் தெரிவித்த தகவலில், “ வான்ஹடே மைதானத்தில் இருந்த எம்சிஏ அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அலுவலகத்தை மூடுகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார். இந்த ஊழியர்கள் அனைவரும் இயல்பான நிலையில்தான் உள்ளனர்.
பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 3 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இருவர் நிதித்துறையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் செயலாக்கத்துறையைச் சேர்ந்தவர்.