ஜோகன்னஸ்பர்க்: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை தென் ஆப்பிரிக்க அணி நெருங்கிவிட்ட நிலையில் 4-வது நாளன இன்று மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்ததால், முதல் ஷெசனில் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரி்க்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்துள்ளது. 240 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, வெற்றிக்கு இன்னும் 122 ரன்கள்தான் தேவைப்படுகிறது, கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன.
எல்கர் 46 ரன்களிலும், டூசென் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் முழுமையாக இருப்பதால், தென் ஆப்பிரிக்காவின் பக்கமே வெற்றிக்காற்று வீசுகிறது. ஆனால், வாண்டரரஸ் மைதானம் இந்தியாவுக்கு ராசியானது. இந்த மைதானத்தில் இந்திய அணி தோற்றதே இல்லை என்பதால், அந்த சென்டிமென்ட் இந்த டெஸ்டிலும் எடுபடுமா என்பது தெரியவில்லை.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 269 ரன்களுக்கு ஆட்டமிழந்து 240 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்ததுள்ளது.
தென் ஆப்பிரி்க்க அணியைப் பொறுத்தவரை டெம்பா புமா, விக்கெட் கீப்பர் வெரேனே இருவர் மட்டுமே தொழில்முறை பேட்ஸ்மேன்கள் மற்றவர்கள் எல்லாம் டெய்லண்டர்கள் என்பதால், தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுக்க இந்திய அணி இன்னும் 3 அல்லது 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியம். விக்கெட் வீழ்த்த முடியாத பட்சத்தில் மழையின் உதவியால் தென் ஆப்பிரிக்காவின் வெற்றியைத் தள்ளிப்போட முடியுமே தவிர, இந்திய அணியால் தடுக்க முடியாது.
அதேநேரம், தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் இதுவரை விளையாடாதவர்கள். தென் ஆப்பிரக்கா என்றாலே சோக்க்ர்ஸ் என்ற வார்த்தையை கடினமான, நெருக்கடியான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்து “அதுக்கு சரிபட்டு வரமாட்டார்கள்” என்பதை உண்மையாக்கிவிடுவார்கள்.
ஆதலால், இந்த ஆடுகளத்தில் மழை பெய்தபின் சேஸிங் செய்வது மிகக் கடினம். பும்ரா, ஷமி, சிராஜ், தாக்கூர் மூவரும் லென் லென்த்தில் பந்துவீசி நெருக்கடி கொடுத்தாலே தாங்கமுடியாமல் விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இழந்துவிடுவார்கள். ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் வெற்றி பந்துவீச்சாளர்கள் கரங்களில் இருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டு இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணத்தை இங்கு நினைவுகூர வேண்டும். அந்தத் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தாலும் கடைசி டெஸ்டில் கிடைத்த வெற்றி இந்திய அணிக்கு கிடைத்த மகத்தானது.
ஜோகன்னஸ்பர்க்கில் 2018-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி தொடங்கிய கடைசி டெஸ்டில் 241 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் களமிறங்கியது. 124 ரன்கள் வரை ஒரு வி்க்கெட் மட்டுமே தென் ஆப்பிரி்க்க அணி இழந்து வலுவாக இருந்தது.
தோல்வி இந்திய அணிக்கு நிச்சயம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நேரத்தில் ஷமி, இசாந்த் சர்மா, பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் கொடுத்த நெருக்கடியால் விக்கெட்டுகளை மளமளவென தென் ஆப்பிரிக்க அணி இழந்து 177 ரன்களில் சுருண்டது. அதாவது 124 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 53 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் வலுவான டிவில்லியர்ஸ், டீகாக், எல்கர், டூப்பிளசிஸ், பிலான்டர், அம்லா, மார்க்ரம் ஆகியோர் இருந்தனர்.அவர்களுக்கே நெருக்கடி கொடுத்து இந்திய அணியின் ஷமி, பும்ரா பந்துவீசினர். இப்போது இருக்கும் தென் ஆப்பிபிரிக்க அணியில் பேட்ஸ்மேன்கள் அனுபவம் குறைந்தவர்கள், 50 ரன்கள் பேட்ஸ்மேன்கள் இவர்களுக்கு நீண்ட இன்னிங்ஸ் ஆடிய அனுபவம் இல்லை. இவர்களுக்கு பந்துவீச்சில் நெருக்கடி அளித்தால் விக்கெட்டுகளை மளமளவென இழப்பார்கள், 2018-ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்பும்.