விளையாட்டு

ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடையை எதிர்கொள்கிறார் மரியா ஷரபோவா

ராய்ட்டர்ஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஊக்க மருந்து சோதனையில் ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் ஷரபோவா தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை எடுத்துக் கொண்டது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் விளையாட இடைக்கால தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஷரபோவா தனது உடல் நலத்துக்காக ‘மெல்டோனியம்’ என்ற மருந்தை எடுத்துக் கொண்டதாக சோதனையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வரும் மார்ச் 12-ம் தேதி முதல் அவர் டென்னிஸ் விளையாட இடைக்கால தடையை சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு விதிக்கலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

மரியா ஷரபோவா கடந்த 10 ஆண்டுகளாக மெல்டோனியம் என்ற மருந்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார், அவருக்கு அவரது குடும்பத்தின் பரம்பரை நோயான நீரிழிவு நோய் ஷரபோவாவையும் விட்டுவைக்கவில்லை. மேலும் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவர் இந்த மருந்தை சிபாரிசு செய்துள்ளார். இப்போது அது சிக்கலாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மெல்டொனியம் என்ற ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது தெரிய வந்த 7-வது வீரர் ஷரபோவா ஆவார். மெல்டோனியம் என்பது நீரிழிவு மற்றும் குறை மெக்னீசியம் ஆகிய சிகிச்சைகளுக்கு பயன்படும் மருந்தாகும். கடந்த ஜனவரி 1-ம் தேதி உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் மெல்டோனியத்தை தடை செய்தது.

இது குறித்து ஷரபோவா கூறும்போது, “நான் செய்தது மிகப்பெரிய தவறு. நான் எனது ரசிகர்களுக்கும் டென்னிஸ் விளையாட்டுக்கும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டேன். இந்தத் தவறுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்.

இதனால் தடை விதிக்கப்படுவேன் என்று நான் அறிவேன். என்னுடைய டென்னிஸ் வாழ்க்கையை நான் இவ்வகையில் முடிக்க விரும்பவில்லை. நிச்சயம் நான் மீண்டும் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என்றே நம்புகிறேன்” என்றார்.

ஆனால், ஷரபோவா மெல்டோனியம் அடங்கிய மருந்தை எடுத்துக் கொள்ள தொடங்கிய போது உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தின் தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் மெல்டோனியம் இடம்பெறவில்லை.

தனது ஆட்டத்தில் எதிராளியிடம் விரைவில் விட்டுக் கொடுக்காத போராட்ட குணம் படைத்த ஷரபோவா 2004-ம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்சை 6-1, 6-4 என்று வீழ்த்தி 17 வயதில் சாம்பியன் ஆனதோடு, ரஷ்யாவைச் சேர்ந்த முதல் வீராங்கனை விம்பிள்டன் பட்டம் வென்ற சாதனையை நிகழ்த்தினார்.

SCROLL FOR NEXT