டி 20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. கப்தில் 12 பந்தில், 15 ரன் சேர்த்து வில்லி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய காலின் முன்ரோ, வில்லியம்சுடன் இணைந்து சீராக ரன் சேர்த்தார். பவர் பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து அணி 10 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்தது.
10.3-வது ஓவரில் ஸ்கோர் 91 ஆக இருந்த போது வில்லிம்சன் மொயின் அலி பந்தை தூக்கி அடித்து அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 28 பந்தில் 32 ரன் எடுத்தார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்தது. சிறிது நேரத்தில் காலின் முன்ரோவும் நடையை கட்டினார்.
அவர் 32 பந்தில், 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 46 ரன் எடுத்த நிலையில் பிளங்கெட் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 13.2 ஓவரில் 107 ஆக இருந்தது. அடுத்து வந்த ராஸ் டெய்லர் 6 ரன்னில் ஜோர்டான் பந்திலும், ராங்கி 3 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்திலும் வெளியேறினர். 17.4-வது ஓவரில் ஸ்கோர் 139 ஆக இருந்த போது கோரே ஆண்டர்சன் 28 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் ஷான்டர் 7, மெக்லினஹன் 1 ரன்னில் வெளியேறினர். கடைசி 10 ஓவர்களில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெறும் 64 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களையும் வீழ்த்தி நியூஸிலாந்து அணியை 153 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
154 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிர டியாக விளையாடியது. ஜேஸன் ராய், கோரே ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார். பவர் பிளே வில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் குவித்தது. 26 பந்தில் ஜேஸன் ராய் அரை சதம் அடிக்க 10 ஓவர்களில் இங்கிலாந்து 98 ரன்கள் குவித்தது.
44 பந்தில், 2 சிக்ஸர், 11 பவுண்டரி களுடன் 78 ரன்கள் சேர்த்த நிலையில் இஷ் சோதி பந்தில் ஜேஸன் ராய் போல்டானார். அப்போது ஸ்கோர் 12.1 ஓவரில் 110 ஆக இருந்தது. அடுத்த பந்திலேயே மோர்கன் ரன் எதும் எடுக்காமல் வெளியேற ஆட்டத்தில் சிறிது பரபரப்பு தொற்றியது.
எனினும் பதற்றம் அடையாமல் விளையாடி ஜோ ரூட் 27, ஜாஸ் பட்லர் 32 ரன்கள் விளாச 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து.