விளையாட்டு

சூழ்நிலையின் தேவைக்கேற்ப பேட்டிங்கை மாற்றி அமைத்துக் கொள்கிறேன்: யுவராஜ் சிங்

பிடிஐ

முதல் போட்டியில் தோற்றாலும் 2-வது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது அணியின் தன்னம்பிக்கையை மீண்டும் பெற்றுத் தந்துள்ளது என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.

பிசிசிஐ.டிவிக்கு அவர் கூறியதாவது:

ஈடன் கார்டன்ஸ் மைதானம், அதன் ரசிகர்களின் உற்சாகம் என்ற குறிப்பிட்ட நிலைகளுக்காக ஆடாமல் ஆட்டச் சூழ்நிலையின் தேவைகளுக்கேற்ப ஆடுவதில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். சரியான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். நான் பந்தை கவனத்துடன் ஆடி ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வதில் கவனம் செலுத்தினேன். துரதிர்ஷ்டவசமாக கடைசி வரை நின்று போட்டியை முடித்துக் கொடுக்க முடியாமல் போனது. விராட் கோலி ஒரு மிகப்பெரிய பார்மில் உள்ளார். தோனி வந்து முடித்து வைத்தார்.

என்னுடைய திட்டம் என்னவெனில் ஒரு சில பந்துகளை ஆடி, தன்னம்பிக்கை வந்த பிறகு அடித்து ஆட வேண்டும் என்பதே. முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டது. அந்தப் போட்டியில் நாங்கள் விரும்பியது போல் பேட் செய்ய முடியாமல் போனது. பாகிஸ்தானுக்கு எதிராகவும் 3 விக்கெட்டுகள் போன் பிறகு அழுத்தம் ஏற்பட்டது, அப்போது இருவர் நின்று ஆட வேண்டியது கட்டாயம். நானும் விராட் கோலியும் நின்று ஆடினோம்.

இந்த வெற்றி தன்னம்பிக்கையை திரும்பப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக இதே பார்மில் தொடர்வோம் என்று நம்புகிறேன்.

இந்திய அணியின் சமீபத்திய முக்கியமான விஷயம் என்னவெனில் ரன்களை விரைவில் ஓடுவதாகும். ஒன்று, இரண்டு ரன்களுக்கான அழைப்பில் வீரர்களிடையே நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது, இது தற்போதைய இந்திய அணியின் தனிச்சிறப்பான அடையாளமாக உள்ளது.

பாகிஸ்தானை மட்டுப்படுத்தினோம், அவர்களால் ஓவருக்க்கு 6 அல்லது ஆறரை ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. கடைசி ஓவர்களில் அவர்களால் அதிக ரன்களைக் குவிக்க முடியவில்லை” என்றார். யுவராஜ்.

அன்று 14வது ஓவர் தொடக்கத்தில், அதாவது 13-வது ஓவர் முடிவில் 67/3 என்று இருந்த பாகிஸ்தான் 18 ஓவர்களின் முடிவில் 118 ரன்கள் என்று உயர்ந்தது. 5 ஓவர்களில் 51 ரன்கள். இதனை யுவராஜ் கவனிக்கத் தவறிவிட்டார்.

SCROLL FOR NEXT