கராச்சி: பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளார். காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற மைல்கல்லை ரிஸ்வான் எட்டியுள்ளார்.
கராச்சியில் நேற்று நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
முதலில் ஆடிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது. 208 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 45 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த ரிஸ்வான் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசினார். இந்தப் போட்டியில் 11-வது ஓவரின் போது ரிஸ்வான், இந்த காலண்டர் ஆண்டில் டி20 போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கேப்டன் பாபர் ஆஸம் 53 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆசிப் அலி 21 ரன்களும், இப்திகார் அலி ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
மே.இ.தீவுகள் தரப்பில் கேப்டன் நிகோலஸ் பூரன் 37 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் பிரன்டன் கிங் 43 ரன்களும், ஷார்மா ப்ரூக்ஸ் 49 ரன்களும் சேர்த்தனர்.
மே.இ.தீவுகள் வீரர் வேகப்பந்துவீச்சாளர் காட்ரெல், ஆல்ரவுண்டர்கள் ரஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் ஆகியோர், ஒரு ஊழியர் என 4 பேர் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அகேல் ஹூசைன், ஆல்ரவுண்டர் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோருக்கு நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.