விளையாட்டு

பயிற்சியாளர்களில் ஸ்காலரிக்கு மவுசு

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளின் பயிற்சியாளர்களில் பிரேசில் பயிற்சியாளர் லூயில் பெலிப்பே ஸ்காலரிக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. கூகுள் இணையதளத்தில் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட பயிற்சியாளர்களில் ஸ்காலரி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2002-ல் பிரேசிலுக்கு கோப்பையை வென்று தந்த ஸ்காலரி, இப்போது 2-வது முறையாக பயிற்சியாளராக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தைப் பிடித்திருப்பது நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கேல். நடப்பு சாம்பியன் ஸ்பெயினை 5-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வீழ்த்தியதன் மூலம் ஆன்லைனில் மட்டுமல்ல, ஆஃப்லைனிலும் பிரபலமாகியிருக்கிறார் இந்த வான் கேல்.

3-வது இடம் குரேஷிய பயிற்சியாளர் நிகோ கோவக்கிற்கு கிடைத்துள்ளது. கடந்த அக்டோபரில் குரேஷிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கோவக், வீரர்களிடம் மட்டுமல்ல, ரசிகர்களிடமும் செல்வாக்கு பெற்றிருக்கிறார். 3 உலகக் கோப்பைகளில் குரேஷிய அணிக்காக விளையாடியுள்ள அவர், 2006 உலகக் கோப்பையில் அந்த அணியின் கேப்டனாக இருந்தார்.

அமெரிக்க அணி சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இல்லாவிட்டாலும், அதன் பயிற்சியாளர் ஜூர்கன் கிளின்ஸ்மான் கூகுள் தேடலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். 2011-ல் அமெரிக்க பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கிளின்ஸ்மான், 1990-ல் மேற்கு ஜெர்மனி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்.

இத்தாலி பயிற்சியாளர் சீசர் பிரான்டெல்லிக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. ஜெர்மன் பயிற்சியாளர் ஜோசிம் லோ, மெக்ஸிகோ பயிற்சியாளர் மிக்கேல் ஹெரேரா, ஸ்பெயின் பயிற்சியாளர் விசென்டே டெல் பாஸ்கே, கொலம்பியா பயிற்சியாளர் ஜோஸ் பெக்கர்மான், இங்கிலாந்து பயிற்சியாளர் ராய் ஹட்சன் ஆகியோர் முறையே 6, 7, 8, 9, 10-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT