உலகக்கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து, அதன் பயிற்சியாளரும், முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளருமான வக்கார் யூனிஸ் கேட்டுள்ள மன்னிப்பு காலம் கடந்த ஒன்று என முன்னாள் பாக். கேப்டன்கள் ரமீஸ் ராஜா, முகமது யூசுஃப் ஆகியோர் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், ஊடகங்களுக்கு முன் வக்கார் யூனிஸ் கேட்ட மன்னிப்பு தனக்கு வலித்ததாக ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
"வக்கார் மிக உயர்ந்த வீரர்களில் ஒருவர். அவர் மன்னிப்பு கேட்டதை பார்க்கும்போது வலித்தது. தனி ஒருவர் கேட்கும் மன்னிப்பால் எதுவும் மாறிவிடாது என நினைக்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இதைத் தாண்டி சரி செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது" என ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் ஷோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதே தொலைக்காட்சியில், ரமீஸ் ராஜா பேசுகையில், கடந்த காலத்திலும் மோசமான ஆட்டங்களுக்கு பலர் மன்னிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும், "ஒருவர் விமர்சனங்களை எதிர்கொண்டு தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறார். அணி சிறப்பாக செயல்பட்டிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். அணியின் ஆட்டத்திலும் சரி, வீரர்களின் மனப்போக்கிலும் சரி எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. எனவே இப்போது மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே நிறைய சுதந்திரம் தந்தாகிவிட்டது. இப்போது கடுமையான முடிவுகள் எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. அணியில் இருப்பவர்களின் திறமை போதவில்லை என்றால் அது யார் குற்றம்? சில வீரர்களின் திறமை மேம்படுவதைப் போலத் தெரியவில்லை. சிலருக்கு ஓய்வளித்துவிட்டு புதியவர்களை அணியில் சேர்க்க வேண்டும்.
இதே போல என்னைப் பற்றிய விமர்சனம் வந்த போது நான் ராஜினாமா செய்து விலகிவிட்டேன். ஒருவர் தன்னை நிரூபித்துக்கொள்ள 2 வருடஙக்ள் போதும் என நினைக்கிறேன். முடியவில்லை என்றால் அவராகவே விலகிவிடுவது நல்லது" என ரமீஸ் ராஜா கூறினார்.
முகமது யூசுஃப் பேசுகையில், "வக்கார் யூனிஸ் நமக்கு கிடைத்த சிறந்த வீரர்களில் ஒருவர். இந்தியாவில் ராகுல் டிராவிட், ஜூனியர்களுக்கு பயிற்சி அளிப்பதைப் போல இவருக்கும் ஜூனியர் அணி பயிற்சியாளர் பொறுப்பை தரலாம். அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என நினைக்கிறேன்.
தீவிரமான, கடுமையான முடிவுகளை இப்போது எடுக்க வேண்டும். அர்ப்பணிப்புடன் தனது நேரத்தை தந்து நேர்மையாக வேலை செய்ய விரும்புபவர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும்" என்றார்.