விளையாட்டு

ஆசியக் கோப்பை டி 20 இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை: கோப்பையை வெல்லும் முனைப்பில் தோனி குழுவினர்

பிடிஐ

ஆசியக் கோப்பை டி 20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. மிர்புரில் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்திய அணி லீக் சுற்றில் தான் மோதிய 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்து தொடரில் இருந்து வெளியேற்றிய வங்கதேச அணி ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதாக வீழ்த்தியிருந்தது.

வெற்றி உற்சாகம்

இன்னும் இரு நாட்களில் ஐசிசி டி 20 உலகக்கோப்பை தொடங்க உள்ளதால் இன்று நடைபெறும் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோப்பையை வென்று வெற்றி உற்சாகத்துடன் உலகக்கோப்பை யில் கால்பதிக்கும் முனைப்புடன் தோனி தலைமையிலான இந்திய அணி இன்றைய இறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது.

டி 20 உலகக்கோப்பையில் தகுதிச் சுற்றில் விளையாட உள்ள வங்கதேச அணி, உள்ளூர் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தியாவை இன்று இறுதிப்போட்டியில் சந்திக்கிறது. தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் இடத்திலும், வங்கதேசம் 10-வது இடத்திலும் உள்ளது.

கனவு நிறைவேறுமா?

வங்கதேச அணி முதல் முறையாக ஆசியக் கோப்பையில் பட்டம் வெல்லும் கனவுடன் உள்ளது. கடந்த 2012ல் நடைபெற்ற ஆசியக் கோப்பை (50 ஓவர்) இறுதிப்போட்டியில் அந்த அணி பாகிஸ்தானிடம் 2 ரன்னில் தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்ட நிலையில் முன்னணி வீரரான மஹ்முதுல்லா ரியாத்தின் விவேகம் இல்லாத ஆட்டத்தால் வங்கதேச அணி கோப்பையை பறிகொடுத்தது. அதே மஹ்முதுல்லா தான் தற்போதைய தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அன்வர் அலி பந்தில் பவுண்டரி விளாசி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சம பலம்

டி 20 உலகக்கோப்பையை மீண்டும் வெல்லும் நோக்கில் தீவிரமாக உள்ள தோனி தலைமையிலான இந்திய அணி கடைசியாக ஆடிய 10 ஆட்டங்களில் 9ல் வெற்றி கண்டுள்ளது. இரு அணிகளுமே ஆசியக் கோப்பை லீக் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி உள்ள நிலையில், இந்திய அணி சமபலத்துடன் காணப்படுவது சிறப்பம்சமாக உள்ளது.

உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது வங்கதேச அணிக்கு சாதகமான விஷயம். 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் உள்ள மிர்புர் கிரிக்கெட் மைதானத்தில் அந்நாட்டு ரசிகர்கள் கொடுக்கும் நெருக்கடியை முதல் முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய இளம் வீரர்களான ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் சமாளிப்பதில் சற்று சிரமம் ஏற்படலாம்.

வழக்கமான லெவன்

எனினும் இருவரும் அதிக அளவிலான ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளதால் அந்த அனுபவத்தை வைத்து சமாளிக்க முற்படுவார்கள். கடைசி லீக் ஆட்டத்தில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் இன்று வழக்கமாக விளையாடும் லெவனுடன் இந்தியா களம் காணும். இந்த தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரோஹித் சர்மா 137 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஷிகர் தவண் சிறப்பான வகையில் ரன் எடுக்காவிட்டாலும், கேப்டன் தோனி அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார். தொடரில் இருமுறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள விராட் கோலி, கோப்பையை வெல்லும் வகையில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடும். பந்துகள் உயரமாக எழும்பி வராமல் இருக்கும் பட்சத்தில் ரெய்னாவிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படலாம்.

ஹர்திக் பாண்டியா

சில போட்டிகளில் முழு உடல் தகுதியுடன் இல்லாமல் விளையாடிய தோனி தற்போது காயத்தில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல் பட தவறும் பட்சத்தில் தோனி, பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறங்கக்கூடும்.

லீக் சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 18 பந்தில் 31 ரன் விளாசிய ஹர்திக் பாண்டியா அதன் பின்னர் மற்ற ஆட்டங்களில் போதுமான ரன் சேர்க்கவில்லை. அதேவேளையில் பந்து வீச்சில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மெதுவாக வீசப்படும் பந்திலும் பெரிய அளவிலான ஷாட் அடிக்கும் திறன் கொண்ட அவர் இன்று பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

அரபாத் சன்னி

வங்கதேச அணி, பாகிஸ் தானுக்கு எதிராக விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், சபிர் ரஹ்மான், ஷாகிப் அல்ஹஸன் பொறுப்பாக ஆடும் பட்சத்தில் நெருக்கடி தரலாம்.

முஸ்டாபிஜூர் ரஹ்மான் காயம் காரணமாக விலகியுள்ளதால் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. அரபாத் சன்னி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் விக்கெட் வீழ்த்தினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

நேரம்: இரவு 7 மணி

நேரடிஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

SCROLL FOR NEXT