பாகிஸ்தான் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், டி20 உலகக்கோப்பையில் அணியின் மோசமான ஆட்டத்துக்காக மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, அணியின் கேப்டன் ஷாயித் அஃப்ரிடியும் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதைத் தொடர்ந்து அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் ஊடகங்கள் மூலம் மக்களிடம் மன்னிப்புக் கோரினார். ராஜினாமா செய்யவும் முன்வந்துள்ளார்.
தற்போது பாக். அணியின் கேப்டன் அஃப்ரிடியும் தன் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் பேசியுள்ள அஃப்ரிடி கூறியதாவது:
"20 வருடங்களாக, என் நாட்டின் சின்னத்தை என் ஆடையில் தாங்கிக்கொண்டு விளையாடி வருகிறேன். நான் களத்தில் நுழையும்போது ஒட்டுமொத்த தேசத்தின் உணர்ச்சிகளையும் என்னுடன் வைத்துக்கொண்டே நுழைகிறேன். இது வெறும் 11 வீரர்கள் கொண்ட அணி அல்ல. என் ஒட்டு மொத்த தேசத்தின் அணி.
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை. ஆனால் நான் உங்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டிருக்கிறேன். இன்று, அஃப்ரிதியாகிய நான், பாகிஸ்தான் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் என் மீதும், அணியின் மீதும் வைத்திருந்த எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்யவில்லை" இவ்வாறு அஃப்ரிடி பேசியுள்ளார்.
தற்போது துபாயில் இருக்கும் அஃப்ரிடி, நாட்டுக்குத் திரும்பியவுடன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் எனத் தெரிகிறது.