விக்கெட் வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினைப் பாராட்டிய புஜாரா | படம் உதவி: ட்விட்டர். 
விளையாட்டு

அஸ்வின் புதிய மைல்கல்: ஹர்பஜன் சிங் சாதனை முறியடிப்பு

செய்திப்பிரிவு

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல்லை எட்டி, ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்துள்ளார்.

கான்பூரில் நடந்த நியூஸிலாந்து - இந்திய அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெளிச்சக் குறைவு காரணமாக முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால், டிராவில் முடிந்தது.

இந்திய அணி கடந்த 1988 முதல் 1994-ம் ஆண்டுவரை உள்நாட்டில் நடந்த 13 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து முடிவு கிடைத்தவாறு இருந்தது. அதற்கு அடுத்தாற்போல், 2018-ம் ஆண்டு முதல் 2021, மார்ச் 4-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வரை 12 போட்டிகளிலும் முடிவு கிடைத்தது. 13-வது டெஸ்ட் போட்டியிலும் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோது, இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ரன்களுக்கும், நியூஸிலாந்து அணி 296 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 284 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்திருந்தபோது வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதையடுத்து டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது

இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல்லை எட்டினார்.

அதாவது அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வகையில் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்தார். ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரின் சாதனையை அஸ்வின் முறியடித்து தற்போது 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அஸ்வின் 80 டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஜாம்பவான் அனில் கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், முன்னாள் கேப்டன் கபில் தேவ் 434 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்திலும் உள்ளனர்.

SCROLL FOR NEXT