விளையாட்டு

உன் தலையைக் கொய்து விடுவேன்: பத்திரிகையாளரை மிரட்டிய ஸ்பெயின் வீர்ர்

செய்திப்பிரிவு

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணியின் ஜோர்டி ஆல்பா என்ற வீரர் பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியுள்ளார்.

தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 3-0 என்று வீழ்த்தியது ஸ்பெயின். அப்போது ஆட்டம் முடிந்து மைதானத்தை விட்டு வெளியேறுகையில் ஜேவியர் கோம்ஸ் மடலனாஸ் என்ற பத்திரிகையாளரை நோக்கி ஜோர்டி ஆல்பா, “அடுத்த முறை உன் தலையைக் கொய்து விடுவேன் என்று கூறியதோடு தொடர்ந்து ஆம்... ஆம்... அடுத்த முறை நிச்சயம்... நான் உன்னை எச்சரிக்கிறேன்..” என்று கூறியுள்ளார்.

அங்கு கூடியிருந்த மற்ற பத்திரிகையாளர்கள் இது பற்றி கூறுகையில், ஸ்பெயின் விமானம் ஏறும் போது கூட சண்டை நீடித்தது என்று தெரிவித்தனர். மேலும் அந்தப் பத்திரிக்கையாளரை கெட்ட வார்த்தையால் வசை பாடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது பற்றி பத்திரிகையாளர் மடலனாஸ் கூறுகையில், ”எனக்கு ஒன்றும் புரியவில்லை, நான் அவரைப்பற்றி ஒன்றும் எழுதிவிடவில்லை, அவரைப்பற்றி எப்போதாவது ஏதும் எழுதியிருக்கிறேனா என்பதும் எனக்கு நினைவில் இல்லை” என்றார்.

உலக சாம்பியன் என்ற தகுதியில் நடப்பு உலகக் கோப்பைக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ஸ்பெயின் அணி படுதோல்விகளைச் சந்தித்து வெளியேறியது ஸ்பெயின் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT