இந்திய வீராங்கனை பி.வி.சிந்து | கோப்புப்படம் 
விளையாட்டு

இந்தோனேசிய மாஸ்டர் பாட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வி

ஏஎன்ஐ

இந்தோனேசியாவில் நடந்து வரும் இந்தோனேசிய மாஸ்டர் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதியோடு வெளியேறினார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனை சிந்துவை எதிர்கொண்டார் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி.

32 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்துவை 21-13, 21-9 என்ற நேர் செட்களில் எளிதாகத் தோற்கடித்தார் ஜப்பான் வீராங்கனை யமகுச்சி. முதல் செட்டில் சிந்துவும், யமகுச்சியும் கடுமையாகப் போராடினர். ஒவ்வொரு புள்ளியையும் எடுக்க இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இருப்பினும் கடும் போராட்டத்துக்குப் பின்புதான் 20 நிமிடங்களில் 21-13 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை யமகுச்சி வென்றார். 2-வது செட்டை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கிய யமகுச்சி, 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று அந்த செட்டை எளிதாகக் கைப்பற்றினார்.

கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் போட்டிக்குப் பின், தொடர்ந்து 2-வது முறையாக இந்தப் போட்டியிலும் அரையிறுதிவரை வந்து சிந்து தோல்வி அடைந்துள்ளார்.

தாய்லாந்து வீராங்கனை அன் சேயங் மற்றும் பிட்டாயபான் சாய்வான் இடையே நடக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வெல்பவருடன் ஜப்பான் வீராங்கனை யமகுச்சி மோதுவார்.

SCROLL FOR NEXT