ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குத் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது முற்றிலும் நியாயமற்ற முடிவு என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் விரக்தியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
50 பந்துகளில் 77 ரன்கள் (4 சிக்ஸர், 6 பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்ஷெல் மார்ஷுக்கு ஆட்ட நாயகன் விருதும், டேவிட் வார்னருக்கு (53, 38 பந்துகள் 3 சிக்ஸர், 4 பவுண்டரி) தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
டேவிட் வார்னர் இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 289 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருது வென்றார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த மேத்யூ ஹேடன் (2007), பீட்டர்ஸன் (2010) ஆகியோரின் சாதனையை வார்னர் முறியடித்துவிட்டார். இதுவரை உலகக் கோப்பையில் கோப்பையை வென்ற அணியிலிருந்து ஒருவர் முதல் முறையாக தொடர் நாயகன் விருது வென்றுள்ளார் என்றால் அது வார்னர் மட்டும்தான்.
ஆனால், வார்னரை விட இந்தப் போட்டியில் அதிகமான ரன்கள் அடித்தது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அரையிறுதியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. பாபர் ஆஸம் தனது முதல் ஆட்டத்திலேயே இந்திய அணிக்கு எதிராக அரை சதம் அடித்தார், அதன்பின் ஹாட்ரிக் அரை சதங்களையும் அடித்தார். அரையிறுதி வரை பாபர் ஆஸம் 6 இன்னிங்ஸ்களில் 303 ரன்கள் சேர்த்து சராசரி 60 ஆக வைத்திருந்தார்.
இந்நிலையில் தொடர் நாயகன் விருது பாபர் ஆஸமிற்கு வழங்காமல் டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டதற்கு ஷோயப் அக்தர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த ஷோயப் அக்தர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியைச் சந்தித்து நீண்ட காலத்துக்குப் பின் பேசினார். போட்டியின் இறுதிவரை இருந்த அக்தர், வார்னருக்குத் தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டதும் அதிருப்தியுடன் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், “பாபர் ஆஸமிற்குத் தொடர் நாயகன் விருது கிடைக்கும் என்று நான் உண்மையில் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், உறுதியாக நியாயமற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.