விளையாட்டு

ஆமீர் ‘சாதாரண பவுலர்’; பும்ரா ‘அரிய திறமை’ - ரோஹித் சர்மா கருத்து

இரா.முத்துக்குமார்

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் ‘சாதாரண பவுலர்’ என்றும் அதே வேளையில் இந்திய பவுலர் பும்ரா ‘அரிய திறமை’ என்றும் கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

"ஆமிரைப் பற்றி பேசுவதை ஏற்கெனவே நிறுத்தி விட்டேன். பாகிஸ்தான் அணியில் அவர் ஒருவர் மட்டுமே பவுலர் அல்ல, மற்ற 5 வீச்சாளர்களும் அந்த அணிக்காக சிறப்பாக வீசி வருகின்றனர்.

ஆமீரைப் பற்றி நிறைய ஊதிப்பெருக்கப் படுகிறது. ஒரேயொரு போட்டியை வைத்து அவரை இவ்வளவு தூக்கிப் பேசுவது சரியல்ல. அவர் நல்ல பவுலர்தான் ஆனால் அவர் மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டுமல்லவா. இப்போது அவரை வாசிம் அக்ரமுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். அவர் ஒரு சாதாரண பவுலர், ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு நன்றாக விழுந்தால் அவர் நல்ல பவுலர். ஏதோ ஒவ்வொரு முறையும் அவர் அனைவரையும் ஊதித்தள்ளும் வீச்சாளர் போல் பேசப்படுவது வியப்பளிக்கிறது.

ஆனால் மொகமது ஆமீர் வீசும் முறைக்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அவர் பந்து வீசும் போது நான் அவரை பாராட்டினேன்.

பும்ரா ஏற்கெனவே அணியில் தனது அடையாளத்தை நிறுவிக் கொண்டுள்ளார். எனவே ஆமீரைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக பும்ரா பற்றி பேசுவோம். அவர் ஒரு அரிய திறமை படைத்தவர். அவர் நம் அணியின் சிறப்பான பவுலராக நிச்சயம் வளர்ச்சியடைவார்.

அவர் ஒரு விதிவிலக்கு, ஆச்சரியங்களை தனது பந்துவீச்சில் கொண்டு வருபவர். நான் அன்று ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த போது அவர் என்ன மாதிரி வீசுவார் என்று குழம்பினேன், கேப்டனுக்குமே புரியவில்லை. அவரிடம் நல்ல யார்க்கர்கள், பவுன்சர்கள் உள்ளன. மாற்றி மெதுவாக வீசும் பந்துவீச்சும் அவர் கைவசம் உள்ளது. மலிங்கா போன்ற ஒரு ஆக்‌ஷன். இவர்களை தினப்படி நாம் விளையாட முடியாது” என்று பும்ராவை புகழ்ந்தார்.

முன்னதாக, விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ஆமீர் பற்றி கூறும்போது, “அப்படிப்பட்ட ஒரு பந்து வீச்சை விளையாடியது குறித்து எனக்கு மகிழ்ச்சி. அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர்” என்றார்.

SCROLL FOR NEXT