மகளிர் டி 20 உலகக் கோப்பையில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது. மிதாலி ராஜ் 16, வனிதா 2, மந்தனா 1, ஹர்மான்பிரித் கவுர் 16, வேதா கிருஷ்ணமூர்த்தி 24, கோஸ்வாமி 14, பாட்டீல் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாண்டே 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அனம் அமின், அஸ்மாவியா இக்பால், ஷனா மிர், ஷதியா, நிதா தார் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 97 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 16 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. நஹிடா கான் 14, ஷிட்ரா அமீன் 26, பிஸ்மா மரூப் 5, இராம் ஜாவித் 10, அஸ்மாவியா இக்பால் 5, ஷனா மிர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
24 பந்துகளில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. அப்போது முனீபா அலி 12, நிதா தான் ரன் எதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவை, பாகிஸ்தான் அணி வெல்வது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.