விளையாட்டு

ஜேசன் ராய் அதிரடி: நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

செய்திப்பிரிவு

டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 முதல் அரையிறுதியில் நியூஸிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேட்பன் இயான் மோர்கன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய நியூஸிலாந்து அணி 153 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் மட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஜேசன் ராயின் அருமையான இன்னிங்ஸ் உதவியால் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூஸிலாந்து மீண்டும் ஒரு அபாரமான உலகக்கோப்பையை விளையாடி, நாக்-அவுட் போட்டிகளுக்கான உறுதியின்றி வெளியேறியுள்ளது.

டெல்லியில் இங்கிலாந்து 3-வது முறையாக விளையாட நியூஸிலாந்தோ 5-வது மைதானத்தில் விளையாடியது. இதுவும் இங்கிலாந்து தரப்புக்கு சாதகமாக அமைந்தது.

நியூஸிலாந்து அணியில் மீண்டும் மார்டின் கப்தில் தொடக்கத்தில் இறங்கி, டேவிட் வில்லேயை இருமுறை ஆஃப் திசையில் பவுண்டரி விளாசினார், ஆனால் இந்த உத்தி டேவிட் வில்லேயிடம் மீண்டும் பலிக்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகு வில்லியம்சனும், மன்ரோவும் இணைந்தனர். இருவரும் ஸ்கோரை விறுவிறுவென ஏற்ற பவர் பிளேயில் நியூஸிலாந்து 51/1 என்று நிமிர்ந்த்து. ஆனால் லியாம் பிளங்கெட்டின் லெக் திசை பந்து ஒன்று கேன் வில்லியம்சன் மட்டையில் பட்டு ஷார்ட் பைன் லெக் திசையில் அடில் ரஷீத்துக்கு முன்னால் விழுந்த்து. பிறகு அடில் ரஷீத்தின் லெக் திசை பந்தில் வில்லியம்சனை ஸ்டம்ப்டு செய்ய பட்லருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இந்த வாய்ப்புகள் விக்கெட்டாக கைகூடப்வில்லை, ஒருவேளை கை கூடியிருந்தால் நியூஸிலாந்து நிலவரம் மேலும் கலவரமாகியிருக்கும்.

கொலின் மன்ரோ 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். ஆனால் இரு முறை ஸ்டோக்ஸின் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு மன்ரோவின் கால்களுக்கு இடையே புகுந்து பைன் லெக் திசையில் பவுண்டரிகளுக்கு சென்றது. ராய் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுக்க, கேன் வில்லியம்சன் 28 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுக்க 11-வது ஓவரில் நியூஸிலாந்து ஸ்கோர் 1 விக்கெட் இழப்புக்கு 91 என்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் வில்லியம்சன், மொயின் அலி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, மன்ரோ, லியாம் பிளங்கெட் பந்தில் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இங்கிலாந்தின் இறுக்கமான பீல்டிங்கும், பந்து வீச்சும் நியூஸிலாந்து அணியை 175-180 ரன்களை எட்டவிடாமல் செய்தது. டெய்லர், ரோங்கி, சாண்ட்னர், மெக்லினாகன் என்று அனைவரும் அடுத்தடுத்து காலியாக கோரி ஆண்டர்சன் மட்டுமே 23 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து அணி 11-வது ஓவரில் 91/1 என்ற நிலையிலிருந்து தளர்ந்து 153 ரன்களுக்கு நிலைகுலைந்தது.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோர்டானும் சிக்கனமாக வீசினார்.

ஜேசன் ராய் அதிரடி:

154 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், ‘பிளே’ என்றவுடன் கோரி ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.

5-வது ஓவரில் சாண்ட்னரைக் கொண்டு வந்தும் விக்கெட் விழவில்லை, ராயும், ஹேல்ஸும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 82 ரன்களை 8.1 ஓவர்களில் சேர்த்தனர். ஜேசன் ராய், மெக்லினாகனை அடித்த நேர் பவுண்டரியும், சாண்ட்னரை அடித்த ஒரு நேர் பவுண்டரியும், ஒரு ஸ்வீப்பும் நேற்று அவரது நாள் என்பதை உறுதி செய்தது. இவர் 26 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

ஹேல்ஸ் 20 ரன்களில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து சாண்ட்னரிடம் வெளியேறினார். ஜேசன் ராய் 44 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 78 ரன்கள் எடுத்து ஐ.எஸ்.சோதி பந்தில் பவுல்டு ஆனார். அடுத்த பந்தே மோர்கன் சோதியிடம் எல்.பி. ஆக 12.2 ஓவர்களில் இங்கிலாந்து 110/3 என்று ஆனது. ஆனால் நியூஸிலாந்தை அந்த நிலையிலிருந்து எழும்ப விடாமல் ஜோ ரூட் (27 நாட் அவுட்), ஜோஸ் பட்லர் (32 நாட் அவுட்) ஆகியோர் மேலும் சேதமின்றி அடுத்த 5 ஒவர்களில் ஆட்டத்தை முடித்து வைத்தனர், பட்லர் சிக்சருடன் ஆட்டத்தை முடித்தார்.

ஆட்ட நாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT