ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ரவிந்திர ஜடேஜா | படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

பும்ரா புதிய சாதனை; ராகுல் மைல்கல்: இந்திய அணி வெற்றியில் சுவாரஸ்ய தகவல்கள்

செய்திப்பிரிவு

டி20 போட்டிகளில் இந்திய அணியில் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ராவும், விரைவாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் எனும் பெருமையை கே.எல்.ராகுலும் பெற்றனர்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, 17.4 ஓவர்களில் 85 ரன்களில் ஆட்டமிழந்தது. 86 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு தொடர்ந்து கிடைத்த 2-வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 1.619 ரன் ரேட்டுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி 2-வது இடத்தில் இருந்தாலும் புள்ளிகள் அடிப்படையில் நியூஸிலாந்து அணிதான் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தி்ன் சில சுவாரஸ்ய தகவல்கள்

ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்தது என்பதுதான் இந்திய அணி டி20 போட்டியில் பவர்ப்ளேயில் அடித்த அதிகபட்சமாகும். இதற்கு முன் 2018ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் சேர்த்ததே இந்திய அணியின் அதிகபட்சமாக இருந்தது. இது டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட 5-வது உயர்ந்த ஸ்கோராகும்.

இந்திய அணி 50 ரன்களை எட்டுவதற்கு 3.5 ஓவர்கள் தேவைப்பட்டது. இந்திய அணி அதிவிரைவாக 50 ரன்களை எட்டியது இந்த ஆட்டத்தில்தான். இதற்கு முன் 2007ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராகவும், 2016ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2019ல் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராகவும் 4.1 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியிருந்தது.

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 81 பந்துகள் மீதிமிருக்கையில் 8 விக்கெட்டில் இந்திய அணி வென்றது. 10 ஓவர்கள் அதற்கு மேல் அதிகமாக ஓவர்கள் வைத்து ஓர் அணி டி20 போட்டியில் வெல்வது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் இந்திய அணி அதிகபட்சமாக 59 பந்துகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. டி20 உலகக் கோப்பையில் அதிகமான பந்துகள் மீதமிருக்கும் வகையில் பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சார்பில் அதிவேகமாக 18 பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் கே.எல்.ராகுல். இதற்கு முன் 2007ல் யுவராஜ் சிங் 12 பந்துகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அரைசதம் அடித்திருந்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிகவேகமாக அரைசதம் அடித்த 3-வது வீரர் ராகுல் ஆவார்.

டி20 போட்டியில் பவர்ப்ளே ஓவர் முடிவதற்குள் அரைசதம் அடித்த 2-வது வீரர் கே.எல்.ராகுல். இதற்கு முன் 2020ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக முதல்6 ஓவர்ளுக்குள் ரோஹித் சர்மா அரைசதம் அடித்திருந்தார். ராகுல் 2-வது வீரராக அரைசதம் அடித்துள்ளார்

டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை பும்ரா 64 வி்க்கெட்டுகளை வீழ்த்தி பெற்றார். யஜுவேந்திர சஹல் 63 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

ஸ்காட்லாந்துக்கு எதிராக15 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தியதே ஜடேஜாவின் சிறந்தபந்துவீச்சாகும். இதற்கு முன் கடந்த 2014ம் ஆண்டில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதும் ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. டி20 போட்டிகளில் ஜடேஜா பெறும் 2-வது ஆட்டநாயகனஅ விருதாகும். இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார்.

SCROLL FOR NEXT