விளையாட்டு

சீனிவாசனுக்கு தடை கோரும் மனு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

எம்.சண்முகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு தடை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.

இந்திய கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தவர் சீனிவாசன். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரை பதவி நீக்கம் செய்தது. அவருக்குப் பதில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சிவ்லால் யாதவ் ஆகியோர் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் உள்ளிட்ட 13 பேர் மீதான சூதாட்டப் புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி முத்கல் கமிட்டி விசாரித்து வருகிறது.

இந்நிலையில் ஐசிசி தலைவர் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இப்பதவிக்கு சீனிவாசன் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் ஐசிசி தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு தடை விதிக்கக் கோரி, பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பில் உச் சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு கடந்த வாரம் ஏற்க மறுத்தது.

இந்நிலையில், பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி, ‘ஐபிஎல் சூதாட்ட வழக்கு விசாரணையில் உள்ள சீனிவாசனுக்கு தடை விதிக்கும் மனுவை உச்ச நீதிமன்றம் உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவர் ஐசிசி தலைவராகி விடுவார்,’ என்றார்.

இந்திய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதே கோரிக்கையை கடந்த வாரம் வேறொரு நீதிபதிகள் அமர்வு முன்பு வைத்தனர். அந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது இந்த வாதத்தை ஏற்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவ கீர்த்தி சிங் அடங்கிய அமர்வு, ‘ஏற்கெனவே விடுமுறை கால நீதிபதிகள் அமர்வு இந்த மனுவை நிராகரித்துள்ள நிலையில், நாங்கள் விசாரிப்பது முறையல்ல. இந்த மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள எந்த அவசரமும் இல்லை,’ என்று கூறி, மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.

எனவே சீனிவாசன் ஐசிசி தலைவராவதில் இனி பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT