2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மீண்டும் களத்துக்கு வருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களின் வேண்டுகோள், மக்களின் வேண்டுகோளை ஏற்று அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் வருகிறேன் என யுவராஜ் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
39 வயதாகும் யுவராஜ் சிங் இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கிற்குத் தூணாக இருந்தவர். தேவைப்படும் நேரங்களில் சுழற்பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர். இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் 8,701 ரன்களும், 40 டெஸ்ட் போட்டிகளில் 1900 ரன்களும் சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளையும் வீழ்த்திய யுவராஜ் சிங் 2000-ம் ஆண்டில் இந்திய அணிக்கு அறிமுகமாகி பல்வேறு வெற்றிகளைப் பெறக் காரணமாக இருந்தார்.
2011 உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடைசி நேரத்தில் யுவராஜ் சிங் அற்புதமான ஆட்டத்தை ஆடவில்லையென்றால், இந்திய அணியின் பயணம் அத்தோடு முடிந்திருக்கும். ஆனால் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் யுவராஜ் சிங் களமிறங்க வேண்டிய இடத்தில் தோனி களமிறங்கி, இத்தனை நாள் யுவராஜ் சிங் காப்பாற்றிய பெருமைகளை அவர் அள்ளிச் சென்றார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்த யுவராஜ் சிங் இந்திய அணியில் இடம்பெற்றாலும் ஃபார்ம் இல்லாமல் தவித்ததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார்.
2020-21ஆம் ஆண்டு சயத் முஷ்தாக் அலி கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணியில் உத்தேச வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் இடம் பெற்றபோதிலும் அவர் அதில் இடம் பெறவில்லை.
இந்தச் சூழலில் நேற்று இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் பதிவிட்ட கருத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யுவராஜ் சிங் பதிவிட்ட செய்தியில், “உங்கள் விதியை கடவுள் முடிவு செய்கிறார். மக்களின் கோரிக்கை, ரசிகர்களின் வேண்டுகோள் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் மைதானம் வருவேன் என நம்புகிறேன்.
இந்த உணர்வைத் தவிர வேறேதும் இல்லை. உங்கள் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. அதாவது என்னைப் பொறுத்தவரை அதற்கும் மேல். இந்திய அணியை ஆதரியுங்கள் அது நம்முடைய அணி. உண்மையான ரசிகர், ரசிகை கடினமான நேரத்தில் ஆதரவு தெரிவிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் இந்திய அணியில் இடம் பெறுவதைக் குறிப்பிட்டு பதிவிட்டாரா அல்லது டி20 போட்டியைக் குறிப்பிட்டாரா என்ற தெளிவில்லாமல் ரசிகர்கள் உள்ளனர்.