தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் | கோப்புப்படம் 
விளையாட்டு

நான் இனவெறி பிடித்தவன் இல்லை: ரசிகர்களுக்கு குயின்டன் டீ காக் உருக்கமான விளக்கம் 

ஏஎன்ஐ

இனவெறிக்கு எதிராக நான் முழங்காலிட்டு சபதம் ஏற்பது மற்றவர்களுக்குப் பாடமாக அமைந்தால் அது சிறந்ததுதான். ஆனால், நான் இனவெறி பிடித்தவன் இல்லை. அதுபோல் சித்திரிப்பது வேதனையாக இருக்கிறது என்று தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் தெரிவித்தார்.

கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்ற கருத்துக்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் சபதம் ஏற்றனர்.

இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்துக்குப் பின் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம் ஏற்க வேண்டிய நிலையில் விக்கெட் கீப்பர் டீ காக் தனிப்பட்ட காரணங்களால் களமிறங்கவில்லை என்று தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து கிளாசன் களமிறக்கப்பட்டார்.

இனவெறிக்கு எதிராக வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம் ஏற்கும்போது குயின்டன் டீ காக் மட்டும் வராதது பெரும் கண்டனத்தைக் கிளப்பியது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''ரசிகர்களிடமும், அணியின் சக வீரர்களிடமும் முதலில் மன்னிப்பு கேட்டு இதைத் தொடங்குகிறேன். இதை குயின்டன் டீ காக் சர்ச்சையாக மாற்ற ஒருபோதும் விரும்பியதில்லை. இனவெறிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்பதன் முக்கியத்துவமும் எனக்குப் புரியும்.

அதே நேரம், வீரர்கள் உதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. நான் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு சபதம் ஏற்பது மற்றவர்கள் திருந்துவதற்கு உதவுவதாக இருந்தால், மற்றவர்கள் சிறப்பாக வாழ உதவி செய்தால், அதை விட எனக்கு மகிழ்ச்சியளிப்பது ஏதுமில்லை.

அதற்காக மே.இ.தீவுகள் அணிக்கு எதிராகக் களமிறங்காமல் யாரையும் அவமானப்படுத்தவில்லை. குறிப்பாக மே.இ.தீவுகள் அணியினரை அவமதிக்கும் நோக்கில் நான் களமிறங்காமல் இல்லை. கடந்த செவ்வாய்க்கிழமை போட்டி தொடங்கும் முன் இந்த அறிவிப்பு வந்ததால், சிலர் இதைப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். இதில் ஏற்பட்ட குழப்பம், கோபம், அனைவரையும் புண்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன்.

இனவெறிக்கு எதிராக ஒன்றாகச் சேர்ந்து முழங்காலிடுவது முக்கியமானது என நான் கருதுகிறேன். ஆனால், என்னுடைய நிலைப்பாட்டை சிறிதளவு விளக்க இருக்கிறேன்.

நானும் இனக்கலப்பிலான குடும்பத்திலிருந்து பிறந்தவன் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. என்னுடைய சித்தி கறுப்பினத்தவர். என் சகோதரிகள் வெள்ளையினத்தவர்கள். என்னைப் பொறுத்தவரை இனவெறிப் பிரச்சினை பிறந்ததில் இருந்தே இருக்கிறது. இப்போதுதான் இது சர்வதேச இயக்கமாக மாறியுள்ளது.

எந்தத் தனிநபரையும் விட, அனைத்து மக்களையும் சமமாக நடத்துவதும், உரிமைகள் வழங்குவதும் முக்கியமானது. நம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அவை முக்கியமானவை என்று சொல்லித்தான் வளர்க்கப்பட்டேன்.

எங்கள் அணியில் உள்ள அனைவரும் நேற்று இரவு கலந்து பேசியது உணர்ச்சிகரமாக இருந்தது. ஒவ்வொருவரின் நோக்கங்களையும் சிறப்பாகப் புரிந்து கொண்டதாக நான் நினைக்கிறேன். இதுபோன்று முன்பே நடந்திருந்தால், அன்றைய சம்பவம் நடக்காமல் தவிர்த்திருக்கலாம். நான் முன்பே கூறியதுபோல், நான் என்ன விரும்புகிறோமோ அதைச் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனது எண்ணங்களை எனக்குள் வைத்துக்கொண்டு, என் குடும்பத்திற்காகவும், என் தேசத்துக்காகவும் விளையாடியதைப் பெருமையாக நினைக்கிறேன். நான் ஒவ்வொரு நாளும் நடந்து செல்லும்போது, நான் சந்திக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் நேசிக்கும்போதும், அவர்களிடம் இருந்து கற்கும்போதும், அதை ஏன் சைகை மூலம் நான் நிரூபிக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. நான் இனவெறி பிடித்தவனாக இருந்தால், நான் அன்றைய தினம் பொய்யாக மண்டியிட்டு நடித்திருக்கலாம். அது தவறு, சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது.

என்னுடன் வளர்ந்தவர்களுக்கும், விளையாடியவர்களுக்கும் நான் எப்படிப்பட்டவன் என்பது தெரியும். நான் கிரிக்கெட் வீரர் என்பதைவிட முட்டாள், சுயநலக்காரர், முதிர்ச்சியற்றவர் என்றுதான் அழைக்கப்பட்டேன். ஆனால், அவர்கள் வார்த்தை என்னைக் காயப்படுத்தவில்லை.

ஆனால், என்னை இனவெறியன் என்று அழைத்தபோது, என்னைப் பற்றித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது என்னை அது வேதனையில் ஆழ்த்தியது. என் குடும்பத்தை வேதனைப்படுத்தியது. என் கர்ப்பிணி மனைவியைக் காயப்படுத்தியது.

நான் இனவெறி பிடித்தவன் இல்லை. என்னை யாரெல்லாம் நன்கு அறிந்தார்களோ அவர்களுக்கு என்னைத் தெரியும். எனக்கு நன்றாகப் பேசத் தெரியாது என எனக்குத் தெரியும். ஆனால், என்னைப் பற்றி இப்படி நினைத்தமைக்காக, என்னால் முடிந்த அளவு விளக்கம் அளிக்க முயன்றுள்ளேன்.

நான் பொய் கூறவில்லை. நான் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக முக்கியமான போட்டிக்குத் தயாரானபோது, திடீரென இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு சபதம் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றனர்.

நான் என்னுடைய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரையும் விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்காவுக்கு விளையாடுவதை விடச் சிறந்ததாக எதையும் கருதியதில்லை. போட்டி தொடங்குவதற்கு முன்பே, இந்தப் பிரச்சினையை முடித்துவிட்டால் ஒவ்வொருவருக்கும் சிறப்பானதாக இருக்கும். நம்முடைய பணியில் கவனம் செலுத்தி, அடுத்துவரும் போட்டிகளில் வெல்ல முடியும். இனிவரும் போட்டிகளில் நான் விளையாடுவேன்.

எனக்கு ஆதரவு அளித்த அணி வீரர்கள் குறிப்பாக கேப்டன் பவுமாவுக்கு நன்றி. என்னுடன் கேப்டன் பவுமா, அணியினர், தென் ஆப்பிரிக்கா உடன் இருந்தால், என்னுடைய தேசத்துக்காக விளையாடுவதை விட விருப்பமானது ஏதும் இருக்காது''.

இவ்வாறு டீ காக் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT