பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இந்திய கேப்டன் வாழ்த்து கூறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இந்திய அணியை உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்துவரும் பாகிஸ்தான் இதுவரை ஒருமுறைகூட வெல்லமுடியாமல் பெரும் சுமையாக சுமந்துவந்தது. அந்த பிரச்சினை பாபர் ஆஸம் மூலம் தீர்க்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டி முடிந்தது, இந்திய கேப்டன் கோலி, பாகிஸ்தான் வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாமுக்கு கட்டியணைத்து வாழ்த்துகள் தெரிவித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. கோலியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் ரசிகர்கள் பலரும் பாராட்டினர்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் வெறுப்பை அழித்து அன்புக்கு வழிவகுத்துள்ளன என ரசிகர்கள் பலரும் அந்தப் புகைப்படங்களை பதிவிட்டு மகிழ்ந்தனர்.
போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக நின்று பேசும் புகைப்படங்களும் வைரலாகின.