பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி தழுவி வெளியேறினார்.
லாட்விய வீரர் எர்னெஸ்ட்ஸ் குல்பிஸ் என்பவரிடம் பெடரர், 6-7, 7-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் தோல்வி தழுவி வெளியேறினார்.
2004ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் கஸ்தாவோ குயெர்டனிடம் படு தோல்வியடைந்து 3வது சுற்றில் வெளியேறிய பிறகு இந்தத் தோல்விதான் அவரது மோசமான தோல்வி.
32 வயதான ரோஜர் பெடரர் நேற்று வெற்றி பெற்றிருந்தால் தொடர்ந்து 10வது காலிறுதிச் சுற்றுக்கு நுழைந்திருப்பார்.
41 கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்களில் இதோடு சேர்த்து 4-வது முறையாக அவர் காலிறுதிக்குத் தகுதி பெற முடியாமல் போயுள்ளார்.
லாட்விய வீரர் குல்பிஸ் தனது ஃபோர் ஹேண்ட் ஷாட்களைக் கொண்டு பெடரரைத் திணறச் செய்தார். 4-வது செட்டில் பெடரர் 5-2 என்று முன்னிலை பெற்றார். ஆனால் அதே செட்டில் குல்பிஸ், பெடரர் சர்வ் ஒன்றை முறியடிக்கக் காரணம் பெடரர் செய்த 59வது தவறாகும். ஆனால் பெடரர் விடாமல் சில அபார ஷாட்களை ஆடி அந்த செட்டைத் தக்கவைத்தார்.
ஆனாலும் பெடரரின் தவறுகள் தொடர தனது ஃபோர்ஹேண்ட் பவர் ஷாட்டினால் 5-வது செட்டில் துவக்கத்திலேயே பெடரரை பிரேக் செய்து 2-0 என்று முன்னிலை பெற்றார்.
அதன் பிறகு பெடரரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாறாக குல்பிஸ் இரண்டு சக்தி வாய்ந்த 'ஏஸ்' சர்வ்களை அடித்து வெற்றி பெற்றார். முடிக்கும்போது கூட பெடரரின் ஷாட் வெளியே போனது.
பிரெஞ்ச் ஓபன் ரசிகர்கள் பெடரருக்குத் தங்கள் ஆதரவை உரக்கத் தெரிவித்தபோதும், குல்பிஸ் ஆட்டத்தின் தீவிரம் பெடரரை வெளியேற்றியது.
காலிறுதியில் குல்பிஸ், டொமாஸ் பெர்டிச்சைச் சந்திக்கிறார். மற்றொரு 3வது சுற்று ஆட்டத்தில் பிரிட்டன் விரர் ஆண்டி முர்ரே ஜெர்மனியின் கால்ஷ்ரெய்பரை போராடி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.