ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர்-12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.
முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 10 ஓவர்களில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 45 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 45 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது
இலங்கை அணி தகுதிச்சுற்றில் 3 போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது மகிழ்ச்சிதான் என்றாலும், சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் மிகப்பெரிய சோதனையைச் சந்திக்க உள்ளது.
குருப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்க அணிகளை இலங்கை அணி எதிர்கொள்ள வேண்டும். இது தவிர தகுதி்ச்சுற்றில் 2-வது இடம் பிடித்த வங்கதேசமும் இந்த பிரிவில் இடம் பெறுகிறது. இரு அணிகளுக்கும் சூப்பர்-12 சுற்று கடுமையான சோதனையாகவே இருக்கும்.
ஒவ்வொரு வெற்றியையும் பெரிய முயற்சிக்குப்பின்தான்கிடைக்கும். ஆனால், டி20 போட்டியைப் பொறுத்தவரை எந்த அணியையும் நாம் கணிக்க முடியாது, ஆட்டத்தின் போக்கு எந்த நேரத்தில் மாறும்,எந்த வீரர்கள் மாற்றுவார்கள் என்பது களச்சூழலைப் பொறுத்தது. ஆனால், பொதுப்பார்வையாக சூப்பர்-12 சுற்றில் வலுவான அணிகளுக்கு எதிராக இலங்கை வங்கதேச அணிகள் மோதல் நிகழ்த்த உள்ளன.
இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை நெதர்லாந்து அணியை அடித்து துவைத்துவிட்டது இலங்கை அணி. இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் 10-வது ஓவரில் 3 வி்க்கெட்டுகளை வீழ்த்தினார், 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய குமாரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சாமிந்தா வாஸ் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். அதன் வெளிப்படாகவே வலுவான சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சை வெளிப்படுத்துகிறது.ஹசரங்கா 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீக்சனா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
45 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. தொடக்க வீரர் நிசாங்கா(0),அசலங்கா(6) ஆட்டமிழந்தனர். ஆனால், குஷால் பெரேரா 33 ரன்களுடனும், பெர்னான்டோ 2 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்
நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை பேட்டிங் கொலாப்ஸ். பல கனவுகளுடன் வந்த நெதர்லாந்து சர்வதேச தரத்தில் பந்துவீச்சை சந்திக்கும் அளவுக்கு இன்னும் தயாராகவில்லை. 3-வது ஓவரில் 2 விக்கெட்டுகள், 5-வது ஓவரில் 2 விக்கெட்டுகள், 10-வது ஓவரில் 3 விக்கெட்டுகள் என மிகவும் மோசமான முறையில் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.
நெதர்லாந்து அணியில் கோலின் ஆக்கர்மேன்(11) மட்டுமே இரட்ட இலக்கத்தில் ரன் சேர்த்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். பேட்ஸ்மேன்கள் எடுத்த ரன்களோடு ஒப்பிட்டால், இலங்கை அணி வழங்கிய உதரிகள் 6ரன்கள்தான் நெதர்லாந்து அணியின் 3-வது அதிகபட்ச ஸ்கோராகும். இந்த 6 ரன்களையும் கிழித்துப் பார்த்தால் நெதர்லாந்து அணியின் ஒட்டுமொத்த ஸ்கோர் 38 ரன்கள்தான்.