வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ் தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை சேர்த்தது.
ஆசிய கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதின.
இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் வங்கதேசத்தை வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த பாகிஸ்தான் அணி, டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன்கள் வங்கதேச வீரர்களின் அதிரடி பந்துவீச்சால் நிலைகுலைந்தனர்.
அணியின் ஸ்கோர் 28 ரன்களை எட்டுவதற்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது. குர்ரம் மன்சூர் (1 ரன்), ஷார்ஜீல் கான் (10 ரன்கள்), முகமது ஹபீஸ் (2 ரன்கள்), உமர் அக்மல் (4 ரன்கள்) ஆகியோர் தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். பாகிஸ்தானை இந்த இக்கட்டில் இருந்து மீட்கும் முயற்சியில் சர்பிராஸ் அகமது (58 ரன்கள்), ஷோயப் மாலிக் (41 ரன்கள்) ஆகியோர் ஈடுபட்டனர். அவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது.