அல் அமீரத்தில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பி பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் பப்புவா நியூ கினியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சூப்பர் 12 வாய்ப்பை பிரகாசப்படுத்தக்கொண்டது ஸ்காட்லாந்து அணி.
முதலில்பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி 20ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்து 17 ரன்களல் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் 4 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து அணி சூப்பர் 12 பிரிவுக்குள் செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அடுத்ததாக ஓமன் அணியுடன் மட்டும் ஒரு போட்டியில் மோதவுள்ளது இதில் ஸ்காட்லாந்து வெல்லும் பட்சத்தில் முதலிடம் பெற்று சூப்பர்-12 பிரி்வில் ஏபிரிவில் இடம்பெறும்.
அதேநேரம், ஓமன், வங்கதேசம் தலா வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. வங்கதேசம் அணி அடுத்துவரும் பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டும்.
ஒருவேளை ஓமன் அணி, அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்திவிட்டால் ஓமன், ஸ்காட்லாந்து சமநிலையான புள்ளிகளில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் வங்கதேசம் 2-வது இடத்தைப்பிடிக்க அடுத்தப் போட்டியில் பப்புவா நியூ கினியாவை நல்ல ரன் ரேட்டில் வென்றால் 2-வது இடத்தைப் பிடிக்கலாம். பி பிரிவில் முதல் இரு இடங்களைப்பிடிக்க 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஸ்காட்லாந்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்த பெரிங்டனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பெரிங்டன் 49 பந்துகளில் 70 ரன்கள்(3சிக்ஸர்,6பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு வீரர் மேத்யூ கிராஸ் 45 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இவர்கள் இருவர்தான் ஸ்காட்லாந்து அணியில் குறிப்பிடத்தகுந்த ஸ்கோர் செய்தனர். மற்ற வீரர்கள் யாரும் ஜொலிக்கவில்லை.
பப்புவா நியூ கினியா அணியில் கபுவா மோரா 4 விக்கெட்டுகளையும், சாட் சோப்பர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பப்புவா நியூ கினியா அணி களமிறங்கியது. தொடக்கத்திலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பப்புவா அணி இழந்து வந்தது. அனுபவம் வாய்ந்த ஸ்காட்லாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறினர்.
6 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது. 7-வது விக்கெட்டுக்கு நார்மன் வனுவா,டோரிகா இருவரும் ஜோடி சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
டோரிகா 18 ரன்னிலும், நம்பிக்கையளித்த வனுவா 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசிவரிசையில் களமிறங்கிய சாட் சோப்பர் அதிரடியாக 16 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 19.3 ஓவர்களில் 148 ரன்களில் பப்புவா அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஸ்காட்லாந்து தரப்பில் ஜான் டேர்வி 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.