ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட சுற்றில் நெதர்லாந்து அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நெதர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓ டவுட் 51, பீட்டர் சீலார் 21 ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் கர்டிஸ் கேம்பர் 10-வது ஓவரில் ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன் நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.
அவரது மிதவேகப் பந்து வீச்சில் காலின் அக்கர்மன் 11 ரன்னிலும் ரியான் டென் டஸ்சேட், ஸ்காட் எட்வர்ட்ஸ், ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் நடையைகட்டினர். டி 20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த2-வது வீரர் ஆனார் கேம்பர். இதற்கு முன்பு 2007-ல் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியிருந்தார். மேலும் சர்வதேச டி 20 கிரிக்கெட் வரலாற்றில் ரஷித் கான், மலிங்கா ஆகியோருக்கு பிறகு தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கேம்பர்.
107 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து 15.1 ஓவரில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. கரேத் டெலானி 29 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். பால் ஸ்டிர்லிங் 39 பதுகளில் 30 ரன்கள் சேர்த்தார்.