விளையாட்டு

பும்ரா, பாண்டியா வருகையால் கவலை இல்லை: கேப்டன் தோனி கருத்து

செய்திப்பிரிவு

பும்ரா, பாண்டியா வரவால் கடைசி நேர பந்து வீச்சு குறித்த கவலை இல்லை என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் கோப்பையை நாங்கள் தான் வெல்வோம் என்று கூறமுடியாது. குறுகிய வடிவிலான போட்டியில் அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் மிகவும் சிறிது தான். எல்லா அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.

எங்களது திறமைக்கு தகுந் தபடியும், திட்டத்தை சரியாக களத்தில் செயல்படுத்தும் பட்சத்திலும் உறுதியாக நாங்கள் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது. பும்ரா, ஹர்திக் பாண்டியாவால் அணிக்கு பெரிய அளவில் நிவாரணம் கிடைத் துள்ளது. இது மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இவர்களது வரவால் ஆட்டத்தின் கடைசி கட்ட பந்து வீச்சு குறித்த கவலை இல்லாமல் உள்ளது. அதிகப்படியான எதிர்பார்ப்பு அணிக்கு நெருக் கடியை கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை.

பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும் போது எப்போதும் நல்ல படியாக உணர்வேன். பேட்டிங்கை பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பேட்டிங் செய்வதற்கு எவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கிறது என்பது தான் முக்கியம். 90 சதவீதம் நான் ஒரே வகையான பங்களிப்பையே வழங்கி வருகிறேன். சவாலை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆட்டத்தை முடித்து வைக்கும் திறன் விராட் கோலிக்கும் உள்ளது.

என்னை பொறுத்தவரையில் பின்கள வீரர் தான் ஆட்டத்தை முடித்து வைப்பவராக இருக்க வேண்டும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் எப்போதுமே நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டும். ஆனால் எதிரணியினர் பெரிய அளவிலான ரன்களை குவிக்கும் போது 5 முதல் 7வது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பது மிகவும் முக்கிய மானது.

இவ்வாறு தெரிவித்தார் தோனி.

SCROLL FOR NEXT