சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிவந்த இந்திய இளம் கிரிக்கெட் வீரர் அவி பாரோத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அவருக்கு வயது 29.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை சீசனில் சௌராஷ்டிரா அணி வெற்றிக்காக குறிப்பிடத்தகுந்த பங்காற்றியவர் அவி பாரோத். இவர் ஹரியாணா மற்றும் குஜராத் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் அவிக்கு வீட்டில் இருக்கும்போது மாராடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவி 38 முதல் தர கிரிக்கெட் போட்டிகளை விளையாடி 1,547 ரன்களை சேர்த்திருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவி மரணத்துக்கு சவ்ராஷ்ரா கிரிக்கெட் சங்கம் இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “ அவி மரணம் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சௌராஷ்டிரா அணிக்கு மதிப்புமிக்க வீரராக இருந்தார்” என்று தெரிவித்துள்ளது.
சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 53 பந்துகளில் 122 ரன்களை விளாசி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய அவி பாரோத்தின் மரணம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.