விளையாட்டு

ருதுராஜுக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது: டூப்பிளசிஸ் பாராட்டு

செய்திப்பிரிவு

ருதுராஜ் திறமையானவர். அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று டூப்பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸின் தொடக்க வீரர்களாக உள்ள ருதுராஜ், டூப்பிளசிஸ் இருவரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் அடித்த முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

இந்தத் தொடரில் அதிகமான ரன்கள் சேர்த்து ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் வென்றார். 16 போட்டிகளில் விளையாடிய கெய்க்வாட் 635 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு சதம், 4 அரை சதம் அடித்துள்ளார். 23 சிக்ஸர்களும், 64 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.

டூப்பிளசிஸ் 633 ரன்கள் சேர்த்து, 2 ரன்னில் கெய்க்வாட்டைப் பிடிக்க முடியாமல் நேற்றைய ஆட்டத்தில் 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நேற்றைய பேட்டியில் டூப்பிளசிஸ் பேசும்போது, “இது சிறந்த நாள். நான் இன்றைய நாளுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். இது எனது 100-வது ஐபிஎல் போட்டி. இந்த நேரத்தை நான் விரும்புகிறேன். நான் கடந்த 10 பத்து ஆண்டுகளாக சிஎஸ்கேவில் இருக்கிறேன். ருதுராஜ் திறமையானவர். இந்திய கிரிக்கெட் திறமையானவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது.

நான் சில ஆலோசனைகளை அவருக்குக் கூறினேன். அவருக்கு அது உதவலாம். என் ஆலோசனை அவருக்குத் தேவையாக இருக்கும் என்று நான் கருதவில்லை” என்றார்.

2021 ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

SCROLL FOR NEXT