தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மார்ச் 25-ம் தேதி நாக்பூரில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 போட்டியில் களமிறங்க கிறிஸ் கெய்ல் தயாராகி விட்டார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறிவதனா கொடுத்த கேட்சை பிடித்த கெயிலின் இடது தொடை தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டதால் பெங்களூர் ரசிகர்களின் ஏமாற்றமாக அவர் அன்று களமிறங்க முடியாமல் போனது.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறார் கிறிஸ் கெயில். இவரும், மற்றொரு அதிரடி வீரர் பிளெட்சரும் தொடக்கத்தில் களமிறங்குகின்றனர்.
ஏற்கெனவே இங்கிலாந்திடம் வாங்கிக் கட்டிக் கொண்ட தென் ஆப்பிரிக்கா, அன்று ஆப்கான் அணியின் மொகமது ஷசாத் அதிரடிக்கும் சிக்கித் தவித்தது. இந்நிலையில் கிறிஸ் கெயில் களமிறங்குகிறார் என்ற செய்தி தென் ஆப்பிரிக்க அணியினர் வயிற்றில் ‘புளியைக் கரைக்கும்’ செய்தியாகும்.
கெயில் கூறியதாவது:
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பிளெட்சர் கொடுக்கப்பட்ட வாய்ப்பை இருகைகளினாலும் பற்றிக் கொண்டு விட்டார். அபாரமாக ஆடிய பிளெட்சர் கடைசி வரை நின்று வெற்றி பெறச் செய்ததுதான் முக்கியம். இப்படிப்பட்ட வீரர்கள்தான் அணிக்கு முக்கியம். இந்த பிட்ச் நிலைமைகளில் செட்டில் ஆகி விட்டால் கடைசி வரை நின்று விட வேண்டும்.
சாதுரியமாக ஆடுவது அவசியம். அடிக்க வேண்டிய பவுலர்களை சரியாகத் தெரிவு செய்ய வேண்டும். ஒரு பேட்ஸ்மெனாக புதிய பந்தை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் 6 ஓவர்களைக் கடந்து விட்டால் அதன் பிறகு முழுதும் ஆட வேண்டும். நடு ஓவர்களில் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தால் போதும், எந்த இலக்கையும் எளிதில் துரத்தி விட முடியும்.
நான் பிளெட்ச்சருடன் சில முறை களமிறங்கியுள்ளேன், அவர் எந்த வகையான பேட்ஸ்மென் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் அபாயமான வீரர், பெரிய ஸ்கோர்களை எடுக்கக் கூடியவர்” என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான சதம் குறித்து...
நான் உண்மையில் சதம் பற்றி யோசிக்கவில்லை. பவர் பிளே முழுதையும் மர்லான் விளையாடினார். நான் எனக்குள்ளேயே கூறிக்கொண்டேன் என்ன நடந்தாலும் நின்று விடுவது என்று மனதிற்குள் உறுதி செய்து கொண்டேன். அவர்களிடம் ஒரு லெக் ஸ்பின்னர் உட்பட 2 ஸ்பின்னர்கள் உள்ளனர். எனவே இடது கை வீரராக லெக் ஸ்பின்னை எதிர்கொள்வது எளிதாகையால் நின்று விட முடிவெடுத்தேன்.
மொயீன் அலி ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்தது உத்வேகம் அளித்தது. அதன் பிறகே யார் போட்டாலும் அவரை அடித்து விடுவது என்ற முடிவோடுதான் ஆடினேன். அப்போதுதான் யோசித்தேன், ‘கடின உழைப்பைப் போட்டுள்ளோம், சதம் எடுப்போம்’ என்று எனக்குள்ளேயே உறுதி எடுத்துக் கொண்டேன். ஆனாலும் 96 ரன்கள் வந்த பிறகே சதம் எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது.
இவ்வாறு கூறினார் கிறிஸ் கெயில்.