விளையாட்டு

ஷர்துல் தாக்கூரை ஏன் முன்னதாகவே பேட்டிங் செய்ய அனுப்பினோம்?- தோனி பதில்

செய்திப்பிரிவு

டெல்லியுடனான போட்டியில், ஷர்துல் தாக்கூரை ஏன் முன்னதாகவே பேட்டிங் செய்ய அனுப்பினோம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

தோனியின் மிரட்டலான ஆட்டம், உத்தப்பா, கெய்க்வாட் பேட்டிங் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

போட்டி முடிந்த பின்னர் தோனி பேசியதாவது:

''டெல்லி மைதானத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக விளையாடினார்கள். நான் இந்தத் தொடரில் சரியாக விளையாடவில்லை. இந்தப் போட்டியில் பந்து வருவதைப் பார்த்தேன். அடித்தேன். பவுலர் அந்தப் பந்தை எப்படி போடுவார் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அதைத் தவிர்த்து வேறு எதையும் நான் நினைக்கவில்லை.

எங்கள் அணியைப் பொறுத்தவரை அணியில் 9 பேர்வரை பேஸ்ட்மேன்கள் உள்ளனர். தாக்கூரும், தீபக்கும் சிறப்பாக விளையாடுவார்கள். இவர்களில் ஒருவர் இறங்கினால் முதல் பந்திலிருந்து அடித்து ஆடுவார்கள் என்றுதான் தாக்கூரை முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பினோம். ஒரு பவுண்ட்ரி கூட அந்தச் சமயத்தில் பலத்தைத் தரும்.

உத்தப்பாவைப் பொறுத்தவரை அவர் எப்போதும் முன்வரிசையில் வந்து ஆட வேண்டும் என்று நினைப்பவர். இந்த நிலையில் அவருக்கு இப்போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.

ருதுராஜிடம் நான் பெரிய யோசனை எல்லாம் கொடுப்பதில்லை. 12 ஓவர் வரை மட்டும் ஆட முயலாதே. இறுதி ஓவர் வரை ஆட முயற்சி செய் என்று கூறுவேன். ருதுராஜ் திறமையானவர். சிறப்பாக விளையாடி வருகிறார்”.

இவ்வாறு தோனி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT