இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் தொடரிலிருந்தும், டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
முதுகு வலி காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத சூழலில் இருப்பதால் தொடரிலிருந்து விலகுவதாக சாம் கரன் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக அவரின் சகோதரர் டாம் கரன் இங்கிலாந்து டி20 உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வீரராக இருந்த டாம் கரனுக்குப் பதிலாக ரீஸ் டாப்ளி சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் சாம் கரனின் திடீர் முடிவு அந்த அணிக்குப் பின்னடைவுதான். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, சாம் கரன் தனக்கு முதுகுவலி அதிகமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்தப் போட்டியில் பேட்டிங் செய்யா சாம் கரன் பந்துவீச்சில் 4 ஓவர்களில் 55 ரன்கள் வாரி வழங்கினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டஅ றிவிப்பில் “ சாம்கரனின் ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் காயத்தின் தீவிரத்தைத் தெரிவிக்கும். அடுத்த 2 நாட்களில் பிரிட்டனுக்கு சாம் கரன் புறப்படுவார். அங்கு அவருக்கு உயர் பரிசோதனைகள் செய்யப்பட்டு இந்த வார இறுதியில் இங்கிலாந்து அணியின் மருத்துவக் குழு உடல்நிலை குறித்து முடிவு செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம் கரன் ட்வி்ட்டரில் பதிவிட்ட வீடியோவில் “ உண்மையாகவே வேதனைப்படுகிறேன். எனக்குப் பிடித்த சென்னை அணியோடு சீசனை கழிக்க விரும்பினேன். சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். சிறந்த தருணத்தில், இடைவெளியில்தான் நான் அணியிலிருந்து விலகுகிறேன். நான் எங்கிருந்தாலும் சிஎஸ்கே அணிக்காக ஆதரவு தெரிவிப்பேன். சிஎஸ்கே அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்றுவரும் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடர் முடிந்தபின், ஐக்கிய அரபு அமீரகம் வரும் இங்கிலாந்து அணியுடன் இணைந்து கொள்வார்கள். துபாய்க்கு 10 நாட்களுக்கு முன்பாகவே வரும் இங்கிலாந்து அணியினர் பயிற்சிப் போட்டிகளில் விளையாடுகின்றனர்.
டி20உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி:
இயான் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், டாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், டைமால் மில்ஸ், ஜேஸன் ராய், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்