விளையாட்டு

ஜிம்பாப்வேயை தோற்கடித்து சூப்பர் 10 சுற்றில் நுழைந்தது ஆப்கன்

செய்திப்பிரிவு

டி 20 உலக கோப்பை முதல் சுற்று ஆட்டத்தில் பி பிரிவில் முதலிடம் பிடித்து ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. மொகமது நபி 32 பந்தில், 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்னும், மொகமது ஷெஸாத் 40, சமியுல்லா ஷென்வாரி 43 ரன்னும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் பன்யங்ரா 3 விக்கெட் கைப்பற்றினார்.

187 ரன்கள் இலக்குடன் விளை யாடிய ஜிம்பாப்வே அணி 19.4 ஓவரில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷிபந்தா 13, ஹேமில்டன் மஸகட்ஸா 11, முட்டும்பாமி 10, ஷீன் வில்லியம்ஸ் 13, வாலர் 7, ஷிகந்தர் ரஸா 15, சிக்கும்புரா 10, வெலிங்டன் மஸகட்ஸா 6, டிரிபானோ 2, ஷத்ரா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். பன்யங்ரா 17 ரன்களுடன் ஆட்டமிழக் காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக மொகமது நபி தேர்வானார்.

59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் பி பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 10 சுற்றில் விளையாட தகுதி பெற்றது. பி பிரிவில் அந்த அணி ஸ்காட்லாந்து, ஹாங் காங் அணிகளையும் வீழ்த்தி யிருந்தது. சூப்பர் 10 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 17ம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

சூப்பர் 10ல் ஆப்கன். ஆட்டங்கள்

கொல்கத்தா: மார்ச் 17 - இலங்கை

மும்பை: மார்ச் 20 - தென் ஆப்பிரிக்கா

டெல்லி: மார்ச் 23 - இங்கிலாந்து

நாக்பூர்: மார்ச் 27 - மேற்கிந்தியத் தீவுகள்

SCROLL FOR NEXT