விளையாட்டு

சென்னையில் தான் ஓய்வை அறிவிப்பேன்: 2022 ஐபிஎல்.,க்கு ஹின்ட் கொடுத்த தல தோனி

ஏஎன்ஐ

சென்னையில் தான் தனது ஓய்வை அறிவிப்பேன் என்று கூறி ஐபிஎல் அடுத்த சீசனிலும் பங்கேற்பதற்கான ஹின்ட் கொடுத்திருக்கிறார் தல தோனி.

நடப்பு ஐபிஎல் தொடர் துபாயில் நடந்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, கலந்து கொண்ட தனது அணியின் ஸ்பான்சரான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா நிகழ்ச்சி சிஎஸ்கேவின் யூடியூபில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது.

இதில் தோனி பேசுகையில், "ஓய்வைப் பொறுத்தவரை என்னை நீங்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதைப் பார்க்கலாம். அப்போது நான் சென்னை வருவேன். எனது கடைசி ஆட்டத்தை அங்கே விளையாடுவேன். ரசிகர்கள் எனது கடைசி ஆட்டத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படித்தான் விடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

வயது காரணமாக தோனி நடப்பு 2021 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறக்கூடும் எனவும் அவர் சென்னை அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பொறுப்பை ஏற்கக்கூடும் என ரசிகர்களிடையே ஒரு கருத்து நிலவிவருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர் மகேந்திர சிங் தோனி.

2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். 2020 ஆகஸ்டில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்தச் சூழலில் தான் அவர் இந்த சீசனுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என பேசப்பட்டது. இந்நிலையில், அவர் சென்னையில் தான் தனது ஓய்வை அறிவிப்பேன் என்று கூறி ஐபிஎல் அடுத்த சீசனிலும் இடம்பெறுவது குறித்து ஹின்ட் கொடுத்திருக்கிறார்.

ஆயினும், ஊடக யூகங்கள் இல்லை, வழக்கமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை, பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை, பிரம்மாண்டமாக, விடைபெறுவதற்கென எந்த ஆட்டமும் இல்லை, இறுதி உரை எதுவுமில்லை, (அறிவிப்பு வரும் வரை) யாருக்கும் இது பற்றிய ஒரு யோசனையும் இல்லை, அழகான இந்திப் பாடலுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு காணொலியுடன் தனது ஒருநாள் போட்டி ஓய்வை அறிவித்தவர் தோனி என்பதால், அவர் எப்போது என்ன மாதிரியான முடிவை அறிவிப்பார் என்பது ரசிகர்களை பதற்றத்தில் தான் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

SCROLL FOR NEXT