ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தனது அடுத்த 2 லட்சியங்களை நிறைவேற்ற பயிற்சி பெற்று வருகிறார்.
ஒன்று சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு கலக்கு கலக்குவது.
2வது, இங்கிலாந்தில் மீண்டும் நடைபெறும் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியாவில் வென்றது போல் வெல்வது.
இந்த இரண்டு லட்சியங்களுக்காகவும் அவர் தனது குரு டெனிஸ் லில்லியின் அறிவுரையுடன் பயிற்சி பெற்று வருகிறார்.
டெனிஸ் லில்லிதான் முதன் முதலில் மிட்செல் ஜான்சனைக் கண்டுபிடித்தார். அவரை ‘ஒரு தலைமுறையில் ஒருமுறை கிடைக்கும் பவுலர்’ என்று மிட்செல் ஜான்சனைப் பாராட்டியுள்ளார்.
2011ஆம் ஆண்டு கால் காயத்தினால் தன்னம்பிக்கை இழந்து காணப்பட்ட மிட்செல் ஜான்சன் வேகப்புயலாக மறுபிறவி எடுக்கக் காரணமானவர் டெனிஸ் லில்லி.
அவர் ஜான்சன் பந்து வீச்சில் மாற்றங்களை அறிவுறுத்தினார். இன்னும் கொஞ்ச தூரம் அதிகம் ஓடி வரச் செய்தார். மேலும் ஒரே ரிதமில் ஓடி வந்து ஆற்றலை மிச்சப்படுத்தித் தாக்கத்தை அதிகரிப்பது பற்றி அவர் சொல்லிக்கொடுத்துள்ளார்.
அதன் பிறகே ஆஷஸ் தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொத்தம் 59 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஜான்சன்.
இப்போதும் பந்து வீச்சில் பிரச்சனை என்றாலோ அல்லது டெஸ்ட் போட்டியில் சில சூழ்நிலைகளில் எப்படி வீசுவது என்பது பற்றியோ டெனிஸ் லில்லியிடம்தான் அவர் ஆலோசனை கேட்டு வருகிறார்.
இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அப்போது மிட்செல் ஜான்சனைத் தனியாகக் கவனிக்க இந்திய அணி பேட்ஸ்மென்களில் ஓரிருவரை தயார் படுத்துவது நல்லது.