விளையாட்டு

தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புகிறேன்: சர்பராஸ் அகமட்

பிடிஐ

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மெனான சர்பராஸ் அகமட், தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது: நான் தோனியை பலவழிகளில் பின்பற்றி வருகிறேன். விக்கெட் கீப்பராக அவர் காட்டும் வித்தியாசம், பேட்டிங்கில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பது என்ற விதத்தில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். அவர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர், நான் அவரை எனது லட்சிய ஆளுமையாகவே வடிவமைத்துக் கொண்டுள்ளேன்.

உலகக்கோப்பைக்காக இந்தியாவில் விளையாடுவது உற்சாகமளிக்கிறது. என்னுடைய பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் எனது அணியின் தேவைக்கேற்ப ஆடி வருகிறேன். இது வரை நன்றாக ஆடி வந்துள்ளேன்.

ஆனால் வங்கதேசத்தில் (ஆசியக் கோப்பை) நிலைமைகள் கடினமாக இருந்தது. எல்லா அணிகளுமே முதல் 6 ஓவர்களில் தடுமாறின. ஆனால் இங்கு பாகிஸ்தான் போன்ற பிட்ச் கிடைக்கும் எனவே இங்கு நன்றாக ஆடுவோம் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

மார்ச் 16-ம் தேதி பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியிலேயே அபாயகரமான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ஆசியக் கோப்பையில் வங்கதேசத்திடம் பெற்ற தோல்வியின் நினைவிலிருந்து பாகிஸ்தான் மீளூமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT