தரம்சலாவில் நடைபெறும் இந்திய-பாகிஸ்தான் உலகக்கோப்பை டி20 போட்டியில் பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங் தெரிவித்ததையடுத்து வீரர்கள் பாதுகாப்பு குறித்த வெளிப்படையான திட்டவட்ட அறிவிப்பை இந்தியா வெளியிட்டால் மட்டுமே உலகக்கோப்பை டி20-யில் பங்கேற்க முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே அந்த அணிக்கு உலகக்கோப்பையில் பங்கேற்க அனுமதி அளித்தது. ஆனால், பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி இமாச்சல மாநில முதல்வர் வீர்பத்ர சிங், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் தரம்சலாவில் போட்டி நடத்தபடக் கூடாது என்றும், பதான்கோட் தாக்குதலையடுத்து உள்ளூர் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இதனைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் இருக்கிறது என்று மறுத்திருந்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹார்யார் கான் கூறும்போது, “இந்த அச்சுறுத்தல்கள் பாகிஸ்தானை நோக்கியது. இப்போது கூட பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றே இமாச்சல முதல்வர் கூறியிருக்கிறார்.
எங்கள் நாட்டு அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது என்றாலும் இந்த சமீபத்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும், அரசியல் கட்சியான சிவசேனா, தற்போது காங்கிரஸ் ஆகியவை எங்களை விளையாட அனுமதியளிக்காதவாறே தெரிவித்துள்ளன.
இந்த புதிய அச்சுறுத்தல்கள் பற்றி நாங்கள் ஐசிசி-யிடம் தினப்படி தெரிவித்து வருகிறோம். இந்த அச்சுறுத்தல்கள் ஊக்குவிப்பதாக இல்லை.
இந்திய அரசு இதில் ஒரு அடி முன்னே எடுத்து வைத்து பாகிஸ்தான் அணியை வரவேற்கிறோம், முழு பாதுகாப்பு உறுதி அளிக்கிறோம் என்று பொது அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஐசிசியிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
இந்திய அரசு பாதுகாப்பு உறுதி குறித்து நம்பக அறிக்கையை வெளியிட்டால்தான் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இந்திய அரசு பாதுகாப்பு உத்தரவாத அறிக்கை தரவில்லையெனில் நாங்கள் இந்தியாவில் உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம்தான். இதற்காக இறுதிக்கெடு எதுவும் தேவையில்லை நாங்கள் கடைசி நேரத்தில் கூட விலகி விடுவோம்” என்று அச்சுறுத்தியுள்ளார்.