பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் | கோப்புப்படம் 
விளையாட்டு

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு மாரடைப்பு

ஏஎன்ஐ

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழுத் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்சமாம் உல் ஹக்கிற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பின் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்சமாம் உல் ஹக் கடந்த 3 நாட்களாக லேசான நெஞ்சு வலி இருப்பதாகத் தெரிவித்து வந்துள்ளார். ஆனால், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். முதல் கட்டமாக மருத்துவர்கள் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்து ரத்தக்குழாயில் அடைப்பை நீக்கியுள்ளனர். இன்சமாம் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் அணி 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்தவர் இன்சமாம் உல் ஹக். வலதுகை பேட்ஸ்மேனான இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.

51 வயதான இன்சமாம் உல் ஹக் 375 ஒருநாள் போட்டிகளில் 11,701 ரன்களும், 119 டெஸ்ட் போட்டிகளில் 8,829 ரன்களும் சேர்த்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இன்சமாம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். பேட்டிங் ஆலோசகர், தேர்வுக்குழுத் தலைவராக கடந்த 2016 முதல் 2019-ம் ஆண்டுவரை இருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கான பயிற்சியாளராகவும் இன்சமாம் உல் ஹக் செயல்பட்டார்.

இன்சமாம் உல் ஹக் உடல்நிலை விரைவாக குணமடைய பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர்கள் பலரும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT