டி 20 உலக கோப்பை முதல் சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
தர்மசாலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்க தேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் கடைசி வரை களத்தில் ஆட்டமிழக்காமல் நின்று 58 பந்தில், 3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 83 ரன் விளாசினார்.
சவுமியா சர்க்கார் 15, சபீர் ரஹ்மான் 15, ஷாகிப் அல் ஹஸன் 5, மஹ்முதுல்லா 10, முஸ்பிஹூர் ரகிம் 0, நசீர் ஹோஸைன் 3, மோர்டஸா 7 ரன்கள் எடுத்தனர். அராபத் சன்னி 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து தரப்பில் வான்டெர் ஹக்டென் 3 விக்கெட் வீழ்த்தினார்.
154 ரன்கள் இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியால் ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மைபுர்ஹ் 29, பார்ரெஸி 9, கூப்பர் 20, போரன் 29, டாம் கூப்பர் 15, வான் டெர் மெர்வி 1, ஷீலார் 7, முடாஸார் புஹாரி 14, வான் பீக் 4 ரன்கள் எடுத்தனர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தஸ்கின் வீசிய இந்த ஓவரில் நெதர்லாந்து அணியால் 8 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. வங்கதேச தரப்பில் அல் அமீன் ஹோஸைன், ஷாகிப் அல் ஹஸன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக தமிம் இக்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி தனது அடுத்த ஆட்டத்தில் அயர்லாந்தை நாளை சந்திக்கிறது. இதே நாளில் நெதர்லாந்து, ஓமனுடன் மோதுகிறது.
நேற்றுமுன்தினம் இரவு பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
இன்றைய ஆட்டங்கள்
ஸ்காட்லாந்து ஜிம்பாப்வே
இடம்: நாக்பூர்
நேரம்: பிற்பகல் 3 மணி
ஆப்கானிஸ்தான் ஹாங் காங்
இடம்: நாக்பூர்
நேரம்: இரவு 7.30