கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள், கேப்டன் மோர்கன் ஆகியோர் பந்துவீசக் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக் கொண்டதையடுத்து ரூ.24 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 29 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் பந்துவீசுவதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதற்காக அவர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் நிர்வாகம் விடுத்த அறிவிப்பில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்து வீசாமல் அதிகமான நேரம் எடுத்துக் கொண்டமைக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதமும், கேப்டன் மோர்கனுக்கு ரூ.24 லட்சமும் அபராதமாக விதிக்கப்படுகிறது.
ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-வது முறையாக பந்துவீசக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு அபராதம் விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது